Published : 31 Dec 2022 09:31 AM
Last Updated : 31 Dec 2022 09:31 AM
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்கள் பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொருஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 2000-க்கும்மேற்பட்டோர் உணவருந்தாமல், தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 143 பேர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், முதலுதவி பணிகளுக்காக டிபிஐ வளாகத்திலேயே தற்காலிகமாக மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, போராட்டக் குழுவினருடன் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் கூறியது; ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசிடம் போதிய நிதி இல்லாததால் கோரிக்கையை உடனே நிறைவேற்ற முடியாது. எனினும், முதல்வருடன் ஆலோசித்து ஊதிய முரண்பாட்டை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தரப்பில் உறுதி தரப்பட்டது.
அதேநேரம், நாங்கள் கடுமையான நிதி நெருக்கடி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில் தவிக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிடும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்துக்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், தங்கள் ஆதரவை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களிடம் கூறும்போது, "சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டியது அவர்களின் கடமையாகும். கடந்த 4 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், முதல்வர் கண்டும் காணாமல் இருப்பது ஏற்புடையதல்ல" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT