Published : 31 Dec 2022 05:57 AM
Last Updated : 31 Dec 2022 05:57 AM

யாருடைய தலைமையில் அதிமுக கட்சி இயங்குகிறது? - மத்திய அரசு, சட்ட ஆணையம், தேர்தல் ஆணைய கடிதங்களால் குழப்பம்

சென்னை: மத்திய அரசு, மத்திய சட்ட ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக தலைவர்களுக்கு அடுத்தடுத்து அனுப்பப்பட்ட கடிதங்களால், யார் தலைமையில் கட்சி இயங்குகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினையால் பழனிசாமி-ஓபிஎஸ் தரப்பினர், தனித்தனியே மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர். பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இடைக்காலப் பொதுச்செயலாளர் நியமனம் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பினர் தெரிவித்துவிட்டனர். இதை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பும் மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மத்திய சட்ட ஆணையம் ஆகியவை அனுப்பியுள்ள கடிதங்கள் இரு தரப்பையும் உற்சாகப்படுத்தினாலும், அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, அடுத்த ஜி-20 மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கடந்த 5-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில் பங்கேற்க அதிமுக சார்பில் பழனிசாமிக்கு மட்டும் மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறையால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், அவரது பெயருக்கு கீழ் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மத்திய அரசே இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாக பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓபிஎஸ், கடிதமும் எழுதினார்.

இந்த சர்ச்சை அடங்கிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, மத்திய சட்ட ஆணையம் `ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதிலும், ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் வரவில்லை. பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தை காட்டி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

இதை எதிர்த்து நேற்று முன்தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் அளித்தார்.

இந்த சூழலில், புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்து தருவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது.

வரும் ஜன. 16-ம் தேதி கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. இதற்கான கடிதம் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கேட்டபோது,‘‘ தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. அதன்படிதான் யாரையும் குறிப்பிடாமல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

இதுகுறித்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அப்பதவி காலியாகவே உள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்தான் உள்ளார். எனவே, அவருக்கே தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,‘‘ பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படும். கட்சிக் கொடி மற்றும் அதிமுக சார்ந்த அனைத்தும் பழனிசாமிக்கே சொந்தம் ’’ என்றார்.

அதிமுக தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு, தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம் போன்றவை அனுப்பும் கடிதங்கள், உச்ச நீதிமன்ற வழக்குவிசாரணையில் முக்கிய ஆவணங்களாக தாக்கலாக வாய்ப்புள்ளது. இது அதிமுக தலைமை தொடர்பான குழப்பத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x