Published : 31 Dec 2022 06:58 AM
Last Updated : 31 Dec 2022 06:58 AM
மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் குழு தலைவராக மாநகர மாவட்ட செயலாளர் கோ.தளபதி ஆதரவாளரான கவுன்சிலர் மா.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம், மேயர் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் தங்கள் ஆதரவாளரை மேயராக்க அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, அப் போதைய மாநகர மாவட்டச் செயலாளர்களாக இருந்த பொன்முத்துராமலிங்கம், தளபதி ஆகியோர் முயற்சி செய் தனர்.
ஆனால், திமுக தலைமை மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கியது. அவர் மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள அதுவரை அரசியலி லேயே ஈடுபடாத தனது ஆதர வாளர் வழக்கறிஞர் பொன்வசந்த் என்பவரின் மனைவி இந்திராணியை மேயராக்கினார்.
மேலும் பெரும்பாலான மண்டலத் தலைவர், பல்வேறு பணிக் குழுத் தலைவர் பதவிகள் பழனிவேல் தியாகராஜன் கைகாட்டிய கவுன்சிலர்களுக்கே வழங்கப் பட்டது. அதனால், அந்தப் பதவி களை எதிர்பார்த்த மற்ற திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட் டங்களில் மேயரை எதிர்த்து செயல்பட்டனர்.
இந்நிலையில் வடக்கு, தெற்கு என்று இரண்டு மாநகர மாவட்டமாக செயல்பட்ட மதுரை மாநகர திமுக, ஒரே மாநகர மாவட்டமாக்கப்பட்டு, அதற்கு மாவட்டச் செயலாளர் தேர்தல் அண்மையில் நடந்தது. இதில், மேயர் பதவியைப்போல மாவட்டச் செயலாளர் பதவியையும் தனது ஆதரவாளர் ஒருவருக்கு பெற்றுக் கொடுக்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெரும் முயற்சி செய்தார்.
அவருக்குப் போட்டியாக அமைச்சர் பி.மூர்த்தி, மற்ற நிர்வா கிகள் ஓரணியில் திரண்டு மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு கோ.தளபதியை நிறுத்தினர். கட்சித் தலைமை இருதரப்பையும் அழைத்துப் பேசி மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக கோ.தளபதியை அறிவித்தது.
அதிருப்தியடைந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், கட்சிக் கூட்டங்களில் வெளிப்படையாகவே மதுரை மாநகர உட்கட்சி கோஷ்டி பூசலை குறிப்பிட்டு விமர்சனம் செய்து வந்தார். கட்சித் தலைமை அமைச் சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்டச் செயலர் கோ.தளபதி ஆகியோரை அழைத்து ஒற்றுமையாக செயல்பட அறிவு றுத்தியது.
இருப்பினும், மதுரை மாநகர திமுக நிர்வாகிகள் மட்டுமில்லாது மாநகராட்சி திமுக கவுன் சிலர்களும் இரு கோஷ்டியாக செயல்படுகின்றனர்.
திமுக உட்கட்சித் தேர்தல் முடிந்தநிலையில் மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆதரவு கவுன்சிலர்கள், மாநகராட்சியில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் திமுக மாமன்ற கவுன்சிலர்கள் குழுத் தலைவர், கொறடா, செயலாளர், பொருளாளரை நியமிக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து கட்சித் தலைமை மதுரை மாமன்ற திமுக நிர்வாகிகளை அறிவித்துள்ளது.
திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவராக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி ஆதரவாளரான கவுன்சிலர் எம்.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே மண்டலத் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால், கோ.தளபதி ஆதரவாளர் என்பதால் அவரால் மண்டலத் தலைவராக முடியவில்லை. அதனால், அவர் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் துணைத் தலைவராக கே.செந்தாமரைக் கண்ணன், கொறடா சி.எம்.துரைபாண்டியன், செயலாளராக பி.பாபு, துணைச் செயலாளராக எம்.சிவா, பொருளாளராக கு.காவேரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்னர்.
இது குறித்து மேயர் தரப்பினர் கூறியது:
இந்த குழுவுக்கு என்ன அதிகா ரங்கள் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், திமுக கவுன்சிலர்கள் ஒற்றுமையாக செயல்படவே இந்த குழுவை கட்சித் தலைமை அமைத்துள்ளது. அவர்களுடன் இணைந்து மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT