Published : 28 Jul 2014 10:35 AM
Last Updated : 28 Jul 2014 10:35 AM

ரம்ஜான் திருநாளில் சமூக ஒற்றுமை தழைக்க சூளுரை ஏற்போம்: வைகோ

ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தியில், சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் என சூளரைப்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "உலகமெலாம் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான ரமலான் நோன்பு நோற்பதை, புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களிலும் பொழுது புலரும் வேளையில் இருந்து அந்தி சாயும் நேரம் வரை பசி பொறுத்து உணவு உண்ணாமல், தாகத்தைத் தாங்கி தண்ணீர் அருந்தாமல் புலன்களை இச்சைகளைக் கட்டுப்படுத்தி நோன்பு தவம் இருத்தலின் நிறைவு செய்யும் நன்னாள்தான் ஈகை திருநாளான ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதல் இசைபட வாழ்தல் எனும் விதத்தில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் இஸ்லாமிய பெருமக்கள் திளைக்கின்றனர்.

அண்ணலார் நபிகள் நாயகம் காட்டிய நெறிகளை ஏற்று வாழும் இஸ்லாமிய பெருமக்கள் கொண்டாடுகிற ரமலான் திருநாளில் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலைநாட்டப்படவும், சமூக ஒற்றுமை தழைக்கவும் பாடுபடுவோம் எனச் சூளுரைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களை இஸ்லாமிய பெருமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்". இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x