Published : 30 Dec 2022 08:34 PM
Last Updated : 30 Dec 2022 08:34 PM

கொலை வழக்கில் இருவரின் ஆயுள் தண்டனையை குறைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: திருமண ஊர்வலத்தில் நடனம் ஆடியதை தட்டிக் கேட்டவரை கொலை செய்த இருவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி, சவுந்தரராஜன் கடந்த 2012-ம் ஆண்டு திருமண ஊர்வலத்தில் பங்கேற்று மணமக்கள் முன் நடனம் ஆடியுள்ளனர். இதை அதே ஊரை சேர்ந்த காந்தி என்பவர் தட்டிக்கேட்டுள்ளார்.இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சில நாட்களுக்கு பின் தனியே சென்று கொண்டிருந்த காந்தியை வழிமறித்த பாலாஜி மற்றும் சவுந்தரராஜன் கொலை செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவர் தரப்பிலும், கொலை செய்யும் நோக்கத்துடன் கத்தியால் குத்தவில்லை என்பதால் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பாலாஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும், சவுந்தரராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x