Published : 30 Dec 2022 03:47 PM
Last Updated : 30 Dec 2022 03:47 PM
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமையவுள்ள இடம், நில அதிர்வு மண்டல வரைபடத்தின்படி, மிதமான ஆபத்து மிக்க பகுதி என்பது ‘வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை’ மூலம் தெரியவந்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சென்னை - மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அறிவித்தார். இதன்படி உதயசூரியன் வடிவில் கருணாநிதி நினைவிடமும், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெற்று இந்த அமையவுள்ளது.
இந்த பேனா நினைவுச் சின்னம் கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு சென்றடையும் வகையில் நினைவிடத்தில் இருந்து 290 மீட்டர் தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறுவதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் தொடர்பான வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி கருணாநிதியின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில் கடலுக்குள் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்தின் கீழ் கருணாநிதி கூறிய கருத்துகளை கல்வெட்டாக பொறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலுக்குள் அமைக்கப்படும் பேனா நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள கட்டுமானம் சிக்குக் கோலம் வடிவில் அமைக்கப்படவுள்ளது. மேலும், நினைவிடத்திலிருந்து பேனா சிலைக்குச் செல்லும் பாலமானது கடல் அலை வடிவத்தில் அமைக்கப்படவுள்ளது.
இந்த வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் மற்றொரு அம்சம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய நிலையான நில அதிர்வு மண்டல வரைபடத்தின்படி, ஆய்வுப் பகுதி மண்டலம் 3-இல் இந்தப் பேனா நினைவுச் சின்னம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மிதமான ஆபத்துப் பகுதி (The study area falls under Zone-III (Moderate risk) according to the Indian Standard Seismic Zoning Map) என்பது தெரிய வருகிறது. அதாவது, இந்தப் பகுதி புயல், சுனாமி, சூறாவளி ஏற்படக் கூடிய வாய்ப்புள்ள மிதமான ஆபத்துப் பகுதி என்பதையே இது குறிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT