Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் நள்ளிரவு பிரச்சாரம் தொடர்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் சென்னையில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக கூட்டணியைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
தருமபுரி பகுதியில் ஏற்கனவே சாதிக்கலவரம் நடந்துள்ளது. அங்கு 144 தடை உத்தரவு நீண்டகாலம் அமலில் இருந்தது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், சமூக விரோத சக்திகளின் செயலையும் முற்றிலுமாகக் கட்டுப்படுத்த வேண்டும். இதுபோல முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தியும் தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்களால் அச்சம் ஏற்பட்டு வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசாரும், தேர்தல் ஆணையமும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நள்ளிரவிலும் பிரசாரம் செய்யலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது, வாக்காளர்களைக் கவர்வதற்கும், அவர்களை திசை திருப்புவதற்கும் பயன்படும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்ற முறைகேடான செயல்களுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழகத்தில் பிரசாரம் செய்ய வரவுள்ளார். அவருடன் பிரசாரத்துக்கு வர வேண்டிய தலைவர்கள் பட்டியலையும் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளோம். நரேந்திரமோடி வரும் தேதி உறுதியானதும், எந்த இடத்தில் பிரசாரம் என்பதை அறிவிப்போம்.
நாங்கள் கருத்து கணிப்பை மட்டும் நம்பி, நரேந்திரமோடி பிரதமராவார் என்று கூறவில்லை.
பிரசாரத்தில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு, பாஜக தலைவர்களின் பிரச்சாரத்துக்கு வரும் மக்கள் கூட்டம் ஆகிய வற்றையும் கருத்தில் கொண்டே மோடி பிரதமர் ஆவது உறுதி என்று கூறுகிறோம்.
தமிழகத்தில் எல்லா தொகுதிகளும் எங்களுக்குத்தான் என்ற அடிப்படையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
பேட்டியின் முடிவில், திரைப்பட நடிகர் கணேஷ்கர் தனது ஆதரவாளர்களுடன் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அவரிடம், உங்கள் மனைவி ஆர்த்தி அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். நீங்கள் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போகிறீர்களே என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், “இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைக் காப்பாற்ற மோடி பிரதமராக வர வேண்டும். எனது மனைவியைப் பற்றி கேட்கிறீர்கள். எங்களைப் பொருத்தவரை குடும்பம் வேறு, அரசியல் வேறு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT