Published : 30 Dec 2022 02:57 PM
Last Updated : 30 Dec 2022 02:57 PM

தமிழகத்தில் 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் தொடக்கம்: பலன் என்ன?

படகுகளில் டிரான்ஸ்பான்டர்களை பொருத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள், மேலும், ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் டிரான்ஸ்பாண்டர் கருவிகளை மீன்பிடி படகுகளில் பொருத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.30) தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (30.12.2022) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அவசர காலங்களில் மீனவர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏதுவாக நீலபுரட்சித் திட்டத்தின் கீழ், 18.01 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டிலுள்ள 4997 மீன்பிடி விசைப்படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த 10 விசைப்படகு உரிமையாளர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்களை வழங்கினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்திட மேம்படுத்தப்பட்ட டிரான்ஸ்பாண்டர்களை (Transponders) உருவாக்கியுள்ளது. நிலப்பரப்பிலிருந்து இந்த டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றம் மேற்கொள்ளலாம். இக்கருவியை படகில் பொருத்தி, புளூடூத் (Blue tooth) வாயிலாக இக்கருவியை இணைத்து அலைபேசியில் உள்ள செயலி வழியாக (Mobile app) தகவல்களையும் பெறலாம்.

டிரான்ஸ்பாண்டர்களை மீன்பிடி விசைப்படகில் பொருத்துவதால், மீன்பிடி படகுகள் புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும்போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும் மற்றும் மீன்வளத்துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப இயலும். அதேபோன்று, கரையிலுள்ள மீன்வளத்துறை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளர்கள் அவசர செய்தியை பெறவோ, அவசர செய்தியை படகிற்கு அனுப்பவோ இயலும்.

அதுமட்டுமின்றி, அதிக மீன்கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகிற்கு அனுப்ப இயலும். மேலும், இக்கருவியின் மூலம் ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாக கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், படகு கடலில் பயணம் செல்லும் பாதையையும் கண்டறிய இயலும்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கவுதமன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x