Published : 30 Dec 2022 01:46 PM
Last Updated : 30 Dec 2022 01:46 PM
சென்னை: ‘ஆர்விஎம்’ இயந்திரம் செயல்பாடுகள் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி உள்ளார்.
உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
உள்நாட்டில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ஆர்விஎம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்மாதிரியான இந்த இயந்திரம், பல தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜன. 16-ம் தேதி ஆர்விஎம் இயந்திர செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்குமாறு 8 தேசியக் கட்சிகள் மற்றும் 57 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிமுகவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னமும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தில் உள்ளன என்பது இதன்மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று என்று குறிப்பிட்டு சட்ட ஆணையம் சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT