Published : 30 Dec 2022 04:08 AM
Last Updated : 30 Dec 2022 04:08 AM

புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள், ஆபாச நடனம் கூடாது - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை செய்துள்ளது. பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பணியாற்றுவார்கள். 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற உள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனங்களை இயக்கினாலோ வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். மது போதையில் விபத்து உயிரிழப்பை ஏற்படுத்தினால் கொலை வழக்குக்கு நிகரான பிரிவில்வழக்கு பதியப்படும். 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை பாயும்.

பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

31-ம் தேதி மாலை முதல் ஜன. 1-ம் தேதி வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி கிடையாது. மேலும் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. கொண்டாட்டம் முடிந்த பின்னர் பொதுமக்கள் எளிதாக வீடு திரும்ப தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆங்காங்கே ‘கியூஆர் கோடு’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளிலும் உரிய அனுமதி பெற்றே கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும். கொண்டாட்டத்தின்போது போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தெரிந்தால் நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சீல் வைக்கப்படும். 1-ம் தேதி அதிகாலை 1 மணிக்குள் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும். தமிழக அரசின் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து, புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.

1-ம் தேதி அதிகாலை 1 மணியுடன் நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல் மற்றும் மதுபான விற்பனையை நிறுத்திக்கொள்ள வேண்டும். இங்கு வரும் வாகனங்கள் முறையாகச் சோதனைசெய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவாயில்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்துக்குள் வரும் நபர்கள்மற்றும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அரங்கத்துக்குள் 80 சதவீதத்துக்கு மேல் நபர்களை அனுமதிக்கக் கூடாது.

நீச்சல் குளத்தின் மீதோ அருகிலோ தற்காலிக மேடைகளை அமைக்கக் கூடாது. கஞ்சா, போதை மருந்து உள்ளிட்ட போதைப் பொருட்கள் விநியோகம், உட்கொள்வதை ஓட்டல் நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து காவல் துறைக்கு உடனேதகவல் கொடுக்க வேண்டும்.

கலாச்சார நடனங்கள் தவிர ஆபாச நடனம் மற்றும் அருவருக்கத்தக்க கேளிக்கை நடனங்கள் நடைபெறாமல் கண்காணித்து தடை செய்ய வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, ஓட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். காவல் துறை கூறிய விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல், கிளப், பார் மற்றும் கேளிக்கை விடுதிகளின் நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெரினா காமராஜர் சாலை, போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை மற்றும் கடற்கரை உட்புற சாலை ஆகியவை 31-ம் தேதி இரவு 7 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணிவரை மூடப்படும். கடற்கரை உட்புறசாலையில் 31-ம் தேதி இரவு 7 மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. வாகனங்களை நிறுத்த மெரினா மற்றும் பெசன்ட் நகரைச் சுற்றி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.

மணற்பகுதிகளுக்கு செல்ல தடை: இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை மணற்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில், “பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 31-ம் தேதி இரவு 8.00 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர்எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள், கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. ஆகவே, மணற் பகுதிக்கு யாரும் வரவேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x