Published : 30 Dec 2022 04:37 AM
Last Updated : 30 Dec 2022 04:37 AM
ராமேசுவரம்: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பதிவில் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் செல்வது போன்ற மாதிரி வீடியோ காட்சியை வெளியிட்டார்.
பாம்பன் ரயில் பாலம் கட் டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேலான நிலையில், அதில் அடிக் கடி பழுது ஏற்பட்டதால் புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 1.3.2019-ல் காணொலி மூலம் பிரதமர் மோடி பாலப் பணிக்காக அடிக்கல் நாட்டினார். பின்னர் 11.8.2019-ல் பூமி பூஜையுடன் கட்டு மானப் பணிகள் தொடங்கப்பட்டன.
கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட வானிலை மாற்றம் காரணமாகவும், கரோனா பரவல் ஊரடங்கு காரணமாகவும் கட்டுமானப் பணிகளை 2021-ம் ஆண்டுக்குள் முடிக்க முடிய வில்லை. கரோனா கட்டுப்பாடு தளர்வுக்குப் பின்பு பாலப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் 101 தூண்களுடன் கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்படுகின்றன. பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள், படகுகள் செல்ல வசதியாக 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப் பாலம் அமைய உள்ளது. ரயில்வே நிர்வாகம் வரும் மார்ச் மாதத்துக்குள் புதிய பாலத்தின் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் புதிய பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இதில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் செல்வது, தூக்குப்பாலம் இயக்கப்படுவது, படகுகள் வரும்போது தூக்குப்பாலம் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு செல்லப்படுவது போன்ற மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT