Published : 09 Dec 2016 09:05 AM
Last Updated : 09 Dec 2016 09:05 AM
அதிமுக கட்சியில் கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஏழு முறை பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா. அவர் மறைவையடுத்து, காலியாக உள்ள பொதுச் செய லாளர் பதவிக்கு தேர்தல் நடக் குமா? அல்லது மீண்டும் போட்டி யின்றியே பொதுச் செயலாளர் தேர்ந் தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக-வில் இருந்து நீக்கப்பட்டு அதிமுக-வை எம்.ஜி.ஆர். உருவாக்கிய போது கழகத்தை கட்டுக்கோப்பாக நடத்த உறுதியான தலைமை முக்கியம் என்று கருதினார். அதனால், மற்ற கட்சிகளில் இருப்பது போல செயற்குழு உறுப்பினர்கள் அல்லது பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுச் செயலாளர் அல்லது தலைவர் பதவிகளை தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று நினைத்தார். மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தவர், அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்வர் என்ற விதிமுறையை புகுத்தினார். இதுதவிர, அதிமுக-வின் சட்ட விதிகளுக்கு விலக்கு வழங்கும் அதிகாரத் தையும் பொதுச் செயலாளருக்கு எம்.ஜி.ஆர். ஏற்படுத்தினார். அதிமுக-வில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடந்துவருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா இருந்தவரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டெடுப்புக்கு அவசியம் ஏற்படவில்லை.
ஜெயலலிதா 1988, 1989, 1993, 1998, 2003, 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனாலேயே ஜெயலலிதாவுக்கு ‘நிரந்தரப் பொதுச் செயலாளர்’ என்கிற பட்டமும் தொண்டர் களால் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நடக்குமா? அல்லது பொதுச் செயலாளர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவாரா? என்கிற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவரும் கட்சியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் இருந்தனர். கட்சியை ராணுவ அமைப்பு போன்று கட்டுக்கோப்புடன் நடத்திச் சென்றனர். அதிமுக-வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று விமர்சிக்கப்பட்டாலும் அதுவே கட்சி நீடித்து நிலைக்க காரணமாகவும் அமைந்தது. ஆனால், இன்றைக்கு ஜெயலலிதா இல்லாத நிலையில் இது எந்தளவுக்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய சூழலில் அதிமுக-வில் மீண்டும் அதிகார மையங்கள் தலையெடுக்க தொடங்கியிருக்கின்றன. சசிகலா ஏற்கெனவே ஒருமுறை பொதுக்குழு உறுப்பினராக சேர்க்கப் பட்டு, பின்னர் நீக்கப்பட்டார். தற்போது அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. பன்னீர் செல்வம் பொருளாளராக இருக்கிறார். தவிர, பன்னீர் செல்வம், தம்பிதுரை, செங்கோட்டையன், எடப் பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சசிகலா போட்டியிட வேண்டும் எனில் அவரை பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினராக்க வேண்டும். வெளியே இருந்தும் சிலர் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று குரல் கொடுத்துவருகிறார்கள். இவர்கள் தவிர, கட்சியின் விதிமுறைகளின் அடிப் படையில் செயற்குழு மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் எவர் வேண்டு மானாலும் பொதுச் செயலாளருக்காக போட்டியிடலாம்.
அதேசமயம், ‘அனைத்து உறுப்பினர் களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும்’ என்கிற விதியை எம்.ஜி.ஆர். உருவாக்கியிருக்கிறார். ‘போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்வது’ என்பதுதான் இதன் மறைமுகமான அர்த்தம். இந்த சூழலில் மீண்டும் பொதுச் செயலாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவாரா? அப்படி ஒருமனதாக பொதுச் செய லாளரை தேர்வு செய்ய கட்சியின் இதர நிர்வாகிகள் ஒப்புக்கொள்வார்களா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தொண்டர்களிடம் எழுந்துள்ளது. இது ஒரு குழப்பமான சூழல்தான்...” என்கிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு கடைசியாக பொதுச் செயலாளராக வெற்றி பெற்ற ஜெயலலிதா, “எனது 26 ஆண்டு காலத்தில் நிர்வாகத்தில் கட்சி பிரமிக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. 1987-ல் எம்.ஜி.ஆர் மறைந்தபோது 17 லட்சமாக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை 1.50 கோடியாக உயர்ந்துள்ளது. நாம் அனைவரும் ஒற்றுமையாக மக்கள் பணியாற்றினால் நம்மை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது” என்று கூறினார். ஜெயலலிதா கூறியது இன்றைக்கும் பொருந்தும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT