Published : 29 Dec 2022 04:03 PM
Last Updated : 29 Dec 2022 04:03 PM

திராவிடக் கட்சிகளின் தோல்வியைக் காட்டும் தீண்டாமைக் கொடுமைகள்: சீமான் கருத்து

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "அறுபதாண்டுகளுக்கும் மேலாக சாதியொழிப்பு, சமூக நீதி என்றுப் பேசி, திராவிடக் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை ஆண்டபின்பும் சாதியின் பெயரால் நடைபெறும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "புதுகோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயலில் வசித்து வரும் ஆதித்தமிழ் மக்கள் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆட்படுத்தபடுத்தப்படும் செய்தியறிந்து உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆதித்தமிழ் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று அவர்களின் உரிமையை மீட்டு தந்ததோடு, அதற்கு எதிராக நின்றவர்களையும், இரட்டை குவளைமுறையைக் கடைபிடித்து தீண்டாமைக் கொடுமை புரிந்தவர்களையும் உடனடியாக கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், சகோதரி கவிதா ராமுவின் துணிகரச் செயலுக்கும், அவரோடு துணை நின்ற காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது பாராட்டும், வாழ்த்துகளும்.

சகோதரி கவிதா ராமுவை படிக்கின்ற காலத்திலிருந்து நான் அறிவேன். தமது அறிவையும், ஆற்றலையும், அதிகாரமிக்க பதவியையும் எப்போதும் எளிய மக்களின் நல்வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் அவருடைய அர்ப்பணிப்புமிக்க உழைப்பென்பது மிகுந்த போற்றுதலுக்குரியது.

இதே போல் வேங்கைவயலில் ஆதித்தமிழ்மக்கள் பயன்படுத்திய குடிநீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவை கலந்த சமூக விரோதிகள் செயல் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெருங்கொடுமையாகும். அதனை பருகிய குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. சிறிதும் மனச்சான்று இன்றி இத்தகைய வன்கொடுமைகளைப் புரிந்த சமூகவிரோதிகள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் மூலம் கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொள்கிறேன்.

அறுபதாண்டுகளுக்கும் மேலாக சாதியொழிப்பு, சமூகநீதி என்றுப்பேசி, திராவிடக் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை ஆண்டபின்பும் சாதியின் பெயரால் நடைபெறும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் திராவிடக் கட்சிகளின் தோல்வியையே காட்டுகிறது. ஆகவே, இனியும் இதுபோன்ற சாதிய, தீண்டாமை வன்கொடுமைகள் தமிழ் மண்ணில் தொடர்வதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x