Published : 29 Dec 2022 01:40 PM
Last Updated : 29 Dec 2022 01:40 PM

பேச்சுவார்த்தை தோல்வி | சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் தொடரும்: இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

பேச்சுவார்த்தைக்கு பின்பு பேட்டி அளித்த சங்கத்தினர்

சென்னை: பள்ளிக் கல்வித் துறை செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும், தங்களது போராட்டம் தொடரும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் 3-வது நாளாக இன்று (டிச.29) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,500 பேர் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே போராட்டத்தில் திடீரென ஆசிரியர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் இன்று (டிச.29 ) பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடர்பாக எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறுகையில், "பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களது தரப்பில் ஏதாவது தேதியை குறிப்பிட்ட அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அரசு சார்பில் நாளை அமைச்சரிடம் பேசி விட்டு தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.

முதல்வர் இதில் தலையிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எந்த மாதத்தில் இருந்து எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்று முதல்வர் வாக்குறுதி அளிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x