Published : 29 Dec 2022 01:31 PM
Last Updated : 29 Dec 2022 01:31 PM
சென்னை: வட மாநிலத்தவர்களால் தமிழர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த மற்றும் கண்காணிக்க தனித்துறை தேவை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வடமாநிலக் கொள்ளையர்கள் அடுத்தடுத்து நடத்திவரும் கொலை மற்றும் கொள்ளை நிகழ்வுகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கம்பி மற்றும் சிமெண்டு மொத்த வியாபார கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த கடையில், பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த இருவர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சந்தோஷிடம் இருந்த 4 இலட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற அந்த வடமாநிலத்தவர்கள், அவரை கொடூரமான முறையில் குத்தி கொலை செய்துள்ளனர். இத்தகைய நிகழ்வு பேரதிர்ச்சி அளிக்கிறது.
சமீபத்தில், கடந்த 06.04.2022 - ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022 - பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர். இவ்வாறு, மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள வடமாநிலத்தினர் தமிழ்நாட்டில் இதுபோல் தாக்குதல்களில் ஈடுபடுவதும், கொலை - கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் பெட்டிகளில் முறையான பயணசீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்யும் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அசாம் மாநிலத்திற்கு செல்லும் பெங்களூரு விரைவு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள், ரயில்வே காவல் துறைக்கு புகார் தெரிவித்ததையடுத்து திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டு, 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அடிப்படை ஒழுக்கமோ மனித அறமோ நேயமோ இல்லாத இப்படிப்பட்ட வடவர்களை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்து என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட ஆரியத்துவ சங்கிகளை தமிழகத்தில் நிலைப்படுத்தவே இவர்கள் திட்டமிட்டு களமிறக்கப்படுகிறார்கள். இவர்களுக்காகவே ஒரே நாடு - ஒரே ரேசன் திட்டம் தயாராகிறது. எனவே, தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும், இந்த அநீதியைத் தடுக்க, தமிழகத்தில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டை வழங்கக் கூடாது.
நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல் வெளி மாநிலத்தவர் தமிழகத்திற்குள் நுழைய உள் அனுமதிச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், தனித் துறை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனை கருத்தில் கொண்டு, எதிர் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், இதற்கான தீர்மானத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
தனித்துறையை உருவாக்கும் வரை, தமிழகம் முழுவதும் பரவியுள்ள வடமாநிலத்தவர்களை, மாவட்ட வாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள, வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை - ஆதார் அட்டைகளை திரும்ப பெற வேண்டும். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் சந்தோஷ் கொலைக்கு காரணமான, வடமாநிலத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்த சந்தோஷ்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.'' இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT