Published : 29 Dec 2022 11:44 AM
Last Updated : 29 Dec 2022 11:44 AM
சென்னை: சோதனை கொள்முதல் என்ற பெயரில் வணிக வரி துறையினர் வணிக நிறுவனங்களில் கெடுபிடி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்," சோதனை கொள்முதல் (Test Purchase) என்ற பெயரில் வணிக நிறுவனங்களில் தமிழக அரசின் வணிக வரி துறையினர் கெடுபிடி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உபரி பொருட்களை கொள்முதல் செய்வதில் இருந்தே பொருள் மற்றும் சேவை வரி (GST) வசூலிக்கப்படுகிற நிலையில், உற்பத்தியாளர்களிடம் செய்ய வேண்டிய சோதனையை சில்லறை கடைகளில் செய்வது தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையே.
உடன் இந்த சோதனைகளை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும், டாஸ்மாக் கடைகளில் பல லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நாள் தோறும் மது விற்பனை செய்யும் பல கோடிகளுக்கு 'பில்' கொடுக்க முடியாத தமிழக அரசு, சாதாரண வணிகர்களை கொடுமைப்படுத்துவது முற்றிலும் தவறானது. உற்பத்தியாகும் இடத்தில் வரி வசூல் செய்ய முடியாமல், பொது மக்கள் கூடும் இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவது முறையல்ல.
மேலும், இந்த சோதனையை செய்ய சொல்வதே மத்திய அரசு தான் என்ற வதந்தியை உலவ விடும் சில திமுக ஆதரவு வணிகர் சங்க தலைவர்கள், வர்த்தகர்களுக்கு துரோகம் செய்வதை கை விட்டு, திமுகவுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு, தைரியமிருந்தால் தமிழக அரசிடம் கேள்வி கேட்கட்டும். இல்லையேல் அமைதியாக, திமுவுக்கு அடிமையாக சேவகம் புரியட்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT