Published : 29 Dec 2022 10:56 AM
Last Updated : 29 Dec 2022 10:56 AM

பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காவிடில் மாபெரும் போராட்டம்: தமிழக அரசுக்கு இபிஎஸ் எச்சிரிக்கை

கோப்புப் படம் |

சென்னை: பொங்கலுக்கு வேட்டி, சேலை வழங்காவிடில் திமுக அரசை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சிரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தைப் பொங்கலையொட்டி தமிழக மக்களுக்கு இந்த திமுக அரசு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதை நினைவுபடுத்தி, 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு, பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் பொங்கல் பரிசும், ஒரு முழு செங்கரும்பும் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

மேலும், தைப் பொங்கலையொட்டி, தமிழக மக்களுக்கு செங்கரும்பு வழங்காமல் கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசைக் கண்டித்து, கழக விவசாயப் பிரிவின் சார்பில் 2.1.2023 அன்று திருவண்ணாமலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தேன். கரும்பு விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு கழகம் வடிகால் அமைப்பதை உணர்ந்த இந்த அரசு, கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல், இன்றைய முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கோரிக்கை வைத்த பொங்கல் பரிசுத் தொகையான 5,000 ரூபாயையும் வழங்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக ஆட்சியில், கடந்த தைப் பொங்கல் திருநாளுக்கு, கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது. ஒரு கரும்புக்கு சுமார் 32 முதல் 40 ரூபாய்வரை அரசு விலை நிர்ணயம் செய்து இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வழங்கியும், விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 12 முதல் 18 ரூபாய் வரை மட்டுமே. இதையும் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டிருந்தேன். எனவே, வருகின்ற தைப் பொங்கலுக்கு இடைத்தரகர்களிடம் இருந்தும், வியாபாரிகளிடம் இருந்தும், கமிஷனுக்காக கரும்பை வாங்காமல், நேரடியாக செங்கரும்பு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தலைவலி தீருவதற்குள் வயிற்றுவலி வந்த கதையாக, கரும்பு பிரச்சினை முடிவதற்குள், விலையில்லா வேட்டி-சேலை பிரச்சனை பூதாகரமாக வடிவெடுத்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன.2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி-சேலை நெய்யும் பணி இந்த ``கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன்’’ ஆட்சியின் அகோர பசியால் முடங்கிப்
போயிருப்பதாக நெசவாளர்களும், கூட்டுறவு சொசைட்டிகளைச் சார்ந்தவர்களும் புகார் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.

ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபர் மாதம்தான் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பர் இறுதியிலும், டிசம்பர் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் செய்திகள் கூறுகின்றன. மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமல் நெசவாளர்கள் பரிதவிக்கின்றனர்.

இதனால், 90 சதவீத நெசவாளர்கள் தங்களுக்கு சப்ளை செய்யப்பட்ட நூல் பேல்களை அரசுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி, சேலை தயாரிக்க முடியும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

இதன் காரணமாக, வரும் தைப் பொங்கலுக்கு ஏழை-எளிய மக்கள் அனைவருக்கும் உடுக்க உடை என்ற, எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டம் பாழாகும் சூழ்நிலையை இந்த ஆக்டோபஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது. 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த திமுக அரசை எச்சரிக்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x