Published : 29 Dec 2022 04:06 AM
Last Updated : 29 Dec 2022 04:06 AM

கரோனா | முழு கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும் - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சீனாவிலிருந்து மதுரை வந்த பெண், குழந்தை மற்றும் வெளிநாடு சென்று திரும்பிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆகிய 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், முழு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவிலிருந்து 36 வயதுடைய பெண் ஒருவர், தனது இரு பெண் குழந்தைகளுடன் தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணுக்கும், ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த பெண்ணின் சகோதரர் தனது காரில் 3 பேரையும் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். 3 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது.

தொற்று பாதித்தவர்களின் மாதிரிகள் சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அதற்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். அந்த வைரஸ் பிஏ5 அல்லது பிஏ5-ல் இருந்து உருமாறியிருக்கும் பிஎப்7 வைரஸா என்பது தெரியும்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கும், குறிப்பாக சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங், தென்கொரியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது நிகழ்ச்சிகள், சமுதாய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், கோயில் திருவிழாக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

பிஎப்7 கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவும் வகையைச் சார்ந்தது. பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த பிஎப்7 வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாமும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் 2.6 லட்சம் அளவில் கோவேக்சின், 40,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ஏற்கெனவே 60 வயதைக் கடந்தவர்கள், இணைநோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரில் 60 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் மட்டும் மூக்கு வழியாகச் செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மூக்கு வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை அரசு மருத்துவமனைகளில் செலுத்த அனுமதி வேண்டி கடிதம் அனுப் பப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முழுக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்... புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உட்பட 3 பேர் கடந்த வாரம் ஹஜ் புனிதப் பயணமாக வெளிநாடு சென்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை திரும்பிய இவர்களுக்கு, விமானநிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், ஒரு பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பெண் உட்பட அவருடன் சென்ற அனைவரும் உள்ளூரில் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x