Published : 09 Dec 2016 09:53 AM
Last Updated : 09 Dec 2016 09:53 AM

கொல்லைப்புறம் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை: பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்

பின் கதவு வழியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியமோ எண்ணமோ எங்களுக்கு இல்லை என்று பாஜக-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக 'தி இந்து'வுக்கு அவர் அளித்த பேட்டி:

ஜெயலலிதாவின் மறைவால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

கடந்த 35 ஆண்டு காலமாக தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக, தவிர்க்க முடியாத தலைவராக வாழ்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அவரது மறைவு இயல்பாகவே தமிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடத்தை உண்டாக்கி இருக்கிறது. அவரளவுக்கு செல்வாக்கான நபர்கள் அதிமுகவில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம்.

குறுக்கு வழியில் தமிழக அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக விமர்சனங்கள் வருகிறதே?

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத்தான் மத்திய அரசு எடுத்தது. இதில் பாஜக-வுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை.

மறைந்த முதல்வருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்த வருவது நடைமுறை வழக்கம்; அரசியல் நாகரிகம். இதையெல்லாம் புரிந்துகொள்ளாதவர்கள்தான், பாஜக குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

எதிரியைக்கூட நேருக்கு நேராகத்தான் சந்திக்க நினைப்பவர் பிரதமர் மோடி. எனவே, பின் கதவு வழியாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியமோ எண்ணமோ பாஜக-வுக்கு இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக வேறொரு வரை முதல்வராக்க சசிகலா விரும்பினார். ஆனால், மோடி தலையிட்டதால்தான் ஓ.பி.எஸ். மீண்டும் முதல்வரானார் என்கிறார்களே?

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதைப்போல, திமுக-வும் அவர்களோடு கள்ள உறவு வைத்திருப்பவர்களும், கள்ள உறவு வைக்க துடிப்பவர்களும்தான் இதுபோல கட்டுக்கதைகளை பரப்புகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் மோடி, எந்த அதிகாரத்திலும் இல்லாத சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் சொன்னது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறதே?

இதுபோல ஆறுதல் சொல்வது வடநாட்டு வழக்கம். தமிழகத்துக்கு வேண்டுமானால் இது புதிதாக தெரியலாம். ஆறுதல் சொல்வதற்கு அதிகாரம் முக்கியமல்ல. அவர் யார் என்பதுதான் முக்கியம். அந்த வகையில், ஜெயலலிதாவோடு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உடனிருந்த சசிகலாவுக்கு பிரதமர் ஆறுதல் சொன்னதில் தவறேதும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x