Published : 29 Dec 2022 05:23 AM
Last Updated : 29 Dec 2022 05:23 AM

மாநில அந்தஸ்து கேட்டு புதுச்சேரியில் அதிமுக பந்த் - பெரும்பான்மையான இடங்களில் கடைகள் அடைப்பு

மாநில அந்தஸ்து கோரி புதுச்சேரியில் அதிமுக அழைப்பு விடுத்திருந்த போராட்டத்தால், பிரதான வர்த்தகப் பகுதியான நேரு வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு அதிமுக அழைப்பு விடுத்த பந்த் போராட்டத்தில், நகரப் பகுதியில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிர்க்கட்சித் தலைவரின் ஹோட்டல், 3 பேருந்துகள், 6 டெம்போ கண்ணாடிகள் கல்வீச்சில் சேதமடைந்தன.

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடைபெறும் என புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், கடையடைப்பு நடத்தினால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் வர்த்தக சபை, வணிகர் சங்க கூட்டமைப்பு, தொழில் வர்த்தக பேரவை ஆகியன எதிர்ப்பு தெரிவித்திருந்த.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற போராட்டத்தால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான புதுவை அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. உழவர் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. நகரின் பிரதான வீதிகளான மறைமலை அடிகள் சாலை, நேருவீதி, காமராஜர் வீதி, அண்ணாசாலை, படேல் சாலை, மிஷன் வீதி, புஸ்சி வீதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் திறக்கப்படவில்லை. புறநகரில் பிரதான வீதிகளில் இருந்த கடைகள் திறக்கப்படவில்லை. திரையரங்குகளில் காலை, மதியம் காட்சிகள் இயங்கவில்லை.

புதுவையில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் இயங்கவில்லை. பிற பேருந்துகள் மாநில எல்லையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். பிற்பகலில் இருந்து பேருந்துகள் ஓரளவு இயங்கின. பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்லூரிகள் தொழிற்பேட்டைகள் இயங்கின.

எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் ஹோட்டல் கண்ணாடி, தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் டெம்போக்களின் கண்ணாடிகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. மூலக்குளத்திலுள்ள தனியார்பள்ளி ஒன்றின் பேருந்து கண்ணாடியும் உடைக்கப்பட்டது.

எனினும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுவைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் வழக்கம்போல நகர வீதிகளில் வலம் வந்தனர்.

அதிரடிப்படை போலீஸார் நேற்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகனை அவரது வீட்டில் கைது செய்தனர்.

இதேபோல அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x