Published : 18 Dec 2016 01:26 PM
Last Updated : 18 Dec 2016 01:26 PM

சுத்திகரிப்பு நிலையமின்றி இயங்கும் சாய, சலவைப் பட்டறைகள்: திருப்பூரில் அதிகரிக்கும் நீர், நிலம், காற்று மாசு

திருப்பூரில் 6 ஆண்டுகளுக்கு முன்பு பூஜ்யநிலை சுத்திகரிப்பை காரணம்காட்டி மூடப்பட்ட சாய மற்றும் சலவைப் பட்டறைகள் மீண்டும் பல இடங்களில் திறக்கப்பட்டு, சுத்திகரிப்பு நிலையமின்றி இயங்குவதால் நீர், நிலம் மற்றும் காற்று மாசு அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பின்னலாடைத் தொழிலாளர் நகரமான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால், அதற்கு திருப்பூர் மக்கள் கொடுத்த விலை சற்று அதிகம் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதுகுறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது: 1985-ம் ஆண்டுக்கு பிறகு திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளரத் தொடங்கியது. அப்போது நொய்யல், சின்னக்கரை மற்றும் நல்லாறு கரைகளில் சாய மற்றும் சலவைத் தொழிற்சாலைகள் அமைத்து, சாய நீரை சுத்திகரிக்காமல், அப்படியே வெளியேற்றினர்.

இந்த சாய நீரால் மண் கடும் பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

மூடப்பட்ட சாய ஆலைகள்

2010-ல் நீதிமன்ற உத்தரவுபடி 826 சாயத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. சுத்திகரிப்பு நிலையங்கள் அல்லது பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்த பின்னர் ஆலைகள் செயல்படலாம் என உத்தரவிடப்பட்டது. அதன்படி பல ஆலைகள் செயல்படத் தொடங்கின.

திருப்பூர் முதலிபாளையம் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள சலவைப் பட்டறை கடந்த 2010-ல் மூடப்பட்டது. ஆனால், தற்போது 500 மீட்டர் நீளத்துக்கு குழாய் பதித்து, ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றியுள்ளனர். எத்தனை நாட்கள் இவ்வாறு கழிவுநீர் வெளியேற்றப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது.

இதேபோல், ராயபுரம், காயிதேமில்லத் நகர், கத்தாங்காடு, கொங்கு நகர், வீரபாண்டி, அருள்புரம், கத்தாங்கண்ணி, முதலிபாளையம், காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சாய, சலவைப் பட்டறகள், சுத்திகரிப்பு நிலையங்களின்றி, கழிவுநீரை சுத்திகரிக்காமல் ஆங்காங்கே வெளியேற்றி வருகின்றன. இது தொடர்பாக புகார் அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும், புகார் அளித்தவர் விவரம் குறித்து சாய, சலவைப் பட்டறைகளுக்கு தெரிந்துவிடுவதால், பொதுமக்கள் புகார் அளிக்கவே அஞ்சுகின்றனர்.

பல்லடம் அருகேயுள்ள பூமலூர் பகுதியில் சலவைப் பட்டறை முறைகேடாக இயங்குவதாக பலமுறை புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்டறை மீண்டும் திறக்கப்பட்டு, இயங்கியது. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பகிரங்கமாக புகார் அளித்தபின்புதான், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதும், திருப்பூரின் நிலம், நீர் மற்றும் காற்று மாசுக்கு மிக முக்கியக் காரணம் என்று புகார் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இவை ஒன்றுக்கொன்று சங்கிலிப் பிணைப்புபோல இருப்பதால், தொடர்ச்சியான, வெளிப்படையான நடவடிக்கைகள் மூலமே கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்கின்றனர்.

பஞ்சு, நூல் துகளால் பாதிப்பு

மேலும், சாயத் தொழிற்சாலைகளில் விறகுகொண்டு எரிக்கப்படுவது, பின்னலாடை நிறுவனங்களில் இருந்து வெளியேறும் அளவு கடந்த பஞ்சு மற்றும் நூல் துகள் ஆகியவற்றால் காற்றில் மாசு அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, சாயத் தொழிற்சாலைகளால் நிலத்தடி நீரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சாய ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், வெப்பத்தில் ஆவியாகி காற்றில் கலப்பதால் காற்று மாசடைகிறது. வேதிப்பொருட்களின் கலப்பால் மண்ணில் நச்சுத்தன்மை பரவி, நாளுக்கு நாள் இது அதிகரிக்கிறது. இதனால் குடிநீர் கூட, குடிப்பதற்கு உகந்த நீராக இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் கூறும்போது, “கை, கால் அரிப்பு, கால்நடைகள் மலட்டுத்தன்மை அடைவது, புற்றுநோய் பாதிப்பு, மனிதர்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளாவது என பல்வேறு பாதிப்புகள் திருப்பூர் மக்களுக்கு ஏற்படுகின்றன. இதனால் திருப்பூர் பகுதியில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் அதிகரித்து வருகின்றன.

நோய் தாக்குதல்

திருப்பூரில் பிறந்த குழந்தைகள் ஆஸ்துமா நோய் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு மிக முக்கியக் காரணம் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுத்தன்மையே. மற்ற ஊர்களைக் காட்டிலும் காற்றின் தன்மை திருப்பூரில் அடர்த்தியாக இருப்பதற்கு முக்கியக் காரணம். அதில் கலந்துள்ள பின்னலாடை நிறுவனங்களின் பஞ்சுக் கழிவுகள்தான்” என்றார்.

அதேபோல, பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பூஜ்யநிலை சுத்திகரிப்புக்குப் பிறகு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தாலும், நீர், நிலம் மற்றும் காற்றில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை முற்றிலும் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட யாரும் முன் வரவில்லை என்கின்றனர் திருப்பூர் மக்கள்.

மேலும், மழைக் காலங்களில் சாய ஆலைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவதால், பல்வேறு தருணங்களில் நுங்கும் நுரையுமாக சாயநீர் வெளியேறுகிறது. இதனால் கால்நடை மற்றும் அவற்றை வைத்துள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டாலும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணமுடியவில்லை. எனவே, தொடர்ச்சியான நடவடிக்கை மூலமே, தொழிலாளர் நகரத்தில் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுக்கட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்றனர்.

தொடர்ந்து கண்காணிக்கிறோம்…

இதுகுறித்து திருப்பூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் கூறும்போது, “திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் சிக்கிய சலவைப் பட்டறை கடந்த 2010-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்நிலையில், நிலத்துக்கடியில் குழாய் பதித்து கழிவுநீரை வெளியேற்றினர். இதையடுத்து அந்த ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், ஊத்துக்குளி வட்டங்களில் உள்ள சாய, சலவைப் பட்டறைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது நொய்யல் ஆற்றங்கரையோரம் வேறு யாராவது குழாய் பதித்து கழிவுநீரை வெளியேற்றுகிறார்களோ என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். பொது சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ் பெரும்பாலான சாய, சலவைப் பட்டறைகள் வந்துவிடுகின்றன. எனினும், கண்காணிப்புப் பணியை தொடர்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x