Published : 29 Dec 2022 04:43 AM
Last Updated : 29 Dec 2022 04:43 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கி 22 ஆண்டுகளாகியும், அதை நிறுவ முடியாமல் திருவள்ளுவர் இலக்கியப் பேரவையினர் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்க திருவள்ளுவர் இலக்கியப் பேரவை சார்பில் 1999-ம் ஆண்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 2000-ம் ஆண்டில் சிலை உருவாக்கப்பட்டது. மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் மூலம் 500 கிலோ எடை கொண்ட வெண்கல வார்ப்பு சிலை ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்டது. பேரவை அமைப்பினர், பொதுமக்கள் சிலையை தயாரிக்க நிதியுதவி செய்தனர்.
2000-ம் ஆண்டு திண்டுக்கல் கொண்டு வரப்பட்ட அமர்ந்த நிலையில் உள்ள திருவள்ளுவர் சிலையை அமைக்க பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. அரசு, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு இன்றி எந்த இடத்திலும் சிலையை நிறுவ அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக சிலையை நிறுவ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள லூர்து அன்னை மகளிர் பள்ளி முன்பு திருவள்ளுவர் சிலையை நிறுவிக்கொள்ள பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.
இதையடுத்து சிலையை அமைக்க பீடமும் கட்டப்பட்டது. பீடம் கட்டி முடிக்கும் வரை அமைதியாக இருந்த நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், பீடத்தில் சிலை வைக்க ஏற்பாடுகள் நடந்தபோது திடீரென அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என முட்டுக்கட்டை போட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் கணேசன் சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாரயணபிரசாத் அமர்வு , திண்டுக்கல் ஆட்சியரின் பரிந்துரை அடிப்படையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ 3 வாரத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் அரசாணை பிறப்பிக்க உத்தரவிட்டது. ஆனால், அதன்பிறகும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து திருவள்ளுவர் இலக்கிய பேரவைச் செயலாளர் கணேசன் இந்து தமிழ்திசை செய்தியாளரிடம் கூறியதாவது: நீதிபதிகள் உத்தரவிட்டு ஜனவரி 7-ம் தேதியுடன் 3 வாரம் முடிகிறது. திருவள்ளுவர் சிலையை உருவாக்கி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடர்ந்து சிலையை நிறுவ போராடி வருகிறோம். எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்று வந்தும் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தாமதப்படுத்திவருகின்றன.
ஜனவரி 7-ம் தேதிக்குள் அரசிடமிருந்து நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். பொங்கல் பண்டிகையை ஒட்டி திருவள்ளுவர் தினம் வருவதற்கு முன்பு சிலையை பீடத்தில் வைத்து விட வேண்டும் என்பது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதுவரை முயற்சியை கைவிடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT