Published : 28 Dec 2022 11:31 PM
Last Updated : 28 Dec 2022 11:31 PM
புதுச்சேரி: திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் நடப்பது என் ஆர் காங்கிரஸ் -பாஜக அரசா அல்லது திமுக அரசா என்கின்ற சந்தேகம் எழுகிறது என்று புதுச்சேரி அதிமுக தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறுகையில், "மற்ற மாநிலங்கள் போன்று புதுச்சேரி மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள் இல்லாததால் மாநிலத்தினுடைய வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் எந்த முதலமைச்சராக இருந்தாலும் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலையே தொடர்கிறது.
இது போன்ற சூழ்நிலையில் நம் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து என்பது அவசியமான ஒன்றாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடந்த பந்த் போராட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளும் அரசு, திராவிட முன்னேற்றக் கழக துணையோடு அதிமுகவினரை காவல்துறையை வைத்து கைது செய்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் புகார் அளித்ததின் அடிப்படையில் என்னை கைது செய்துள்ளனர். 25 ஆண்டுகால புதுச்சேரி மாநில அரசியல் வரலாற்றில் பந்த் போராட்டத்திற்காக முன்னெச்சரிக்கையாக யாரும் இதுவரை எந்த அரசியல் கட்சித் தலைவரும் கைது செய்யப்பட்டதில்லை.
ஆனால், திமுகவின் புகாரை அடுத்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நடப்பது என் ஆர் காங்கிரஸ் பாஜக அரசா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி அரசா என்கின்ற சந்தேகம் எழுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏவல் துறையாக புதுச்சேரி காவல்துறை அதிமுகவினரை கைது செய்துள்ளது. பாஜக ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பந்த் நடத்த விட மாட்டோம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் பாஜகவுடன் திராவிட முன்னேற்ற கழகம் மறைமுக தொடர்பை வைத்துள்ளது. அதன்மூலம் அதிமுகவை அழிக்கும் வேளையில் ஈடுபடும் திமுகவிற்கு பாஜக துணை நிற்பதாக தெரிகிறது.
மாநில உரிமையை மீட்டெடுக்கும் இந்த பிரச்சனையில் இதோடு நாங்கள் விட்டுவிடமாட்டோம் மீண்டும் மக்களை திரட்டி தலைமை கழகத்தின் அனுமதி பெற்று தொடர் போராட்டங்களை அதிமுக நடத்தும்" என்று குறிப்பிட்டார்.
மாநில அந்தஸ்து வேண்டும் என்பதே எடப்பாடியின் விருப்பம்: புதுச்சேரியில் பந்த் போராட்டத்தையொட்டி கைதான அன்பழகன் மற்றும் அதிமுகவினரை தமிழக முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட செயலருமான எம்சி சம்பத் புதுச்சேரி வந்தார். கைதாகி கரிகுடோனில் இருந்தோரை சந்தித்து அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து எம்.சி. சம்பத் கூறுகையில், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று முழுவிருப்பத்துடன் ஜெயலலிதா இருந்தார். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் இதே விருப்பத்துடன்தான் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்துள்ளதால் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி மக்கள் அனைவரின் விருப்பமும் மாநில அந்தஸ்தாகத்தான் உள்ளது. மாநில அந்தஸ்து வந்தால்தான் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். புதுச்சேரி உரிமை நிலை நாட்டப்படும். இன்றைய முழு அடைப்பு போராட்டம் ஒரு அடித்தளம். மாநில அந்தஸ்து வழங்கும் வரை இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். போராடி, போராடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றுத்தருவோம்." என்று குறிப்பிட்டார்.
முன்னதாக கைதான அன்பழகனிடம் அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT