Published : 28 Dec 2022 09:30 PM
Last Updated : 28 Dec 2022 09:30 PM

வேப்பூர் அருகே ஆடுகள், ஆட்டின் உரிமையாளர் பலியான விபத்து: ஓட்டுநர் மீது வழக்குப் பதிய சீமான் வலியுறுத்தல்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, லட்சுமணன் மற்றும் அவரது 90 ஆடுகள் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான விபத்தினை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது உரிய வழக்கு பதிவு செய்து விரைந்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உடனடியாக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நெடுத்தாவு கிராமத்தை சேர்ந்த சகோதரர் லட்சுமணன், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் பகுதியில் தமக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது எதிரே வந்த அரசுப்பேருந்து மோதி விபத்து ஏற்படுத்தியதில் தம்பி லட்சுமணனும், அவரது 90 ஆடுகளும் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தம்பி லட்சுமணின் எதிர்பாராத உயிரிழப்பால், ஈடு செய்ய முடியாத இழப்பினை சந்தித்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழ்நாடு அரசு உடனடியாக தம்பி லட்சுமணன் மற்றும் அவரது 90 ஆடுகள் உயிரிழக்கும் அளவிற்கு மோசமான விபத்தினை ஏற்படுத்திய ஓட்டுநர் மீது உரிய வழக்கு பதிவு செய்து விரைந்து நீதிவிசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரசுப் பேருந்து ஏற்படுத்திய விபத்தினால் உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்திற்கு, உயிரிழந்த 90 ஆடுகளினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினையும் கருத்திற்கொண்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு காத்திராமல் உடனடியாக 50 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற செம்மறி ஆடுகள் மீது செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டின் உரிமையாளர் லட்சுமணன் பலியானதோடு அவருக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும் உயிரிழந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x