Published : 28 Dec 2022 05:51 PM
Last Updated : 28 Dec 2022 05:51 PM
மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் இந்தியில் பேசிய தொழிற் பாதுகாப்பு வீரர்களை விசாரிக்கவேண்டும் என, சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்திற்கு திரைப்பட நடிகர் சித்தார்த்தின் பெற்றோர் வந்தனர். அப்போது, உடைமைகளை பரிசோதிப்பதாக கூறி அவர்களிடம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசி, அவர்களை நீண்ட நேரம் காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், ‘‘மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் துன்புறுத்தினார்கள். என்னுடைய வயதான பெற்றோரின் பைகளில் இருந்து காயின்களை எடுக்கும்படி சொன்னார்கள். நாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் விடுத்தபோதும் தொடர்ந்து அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் உரையாடினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இப்படித்தான் இந்தியாவில் இருக்கிறது என்ற நிலையையும் எங்களுக்கு உணர்த்தினார்கள். வேலையில்லாத மக்கள் தங்களின் அதிகாரத்தை காட்டுகிறார்கள்’’ என்று சித்தார்த் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
இது பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ள கருத்துக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகரின் குற்றச்சாட்டு குறித்து மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களிடம் விமான நிலைய நிர்வாகம் விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி அவரும் தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT