Last Updated : 28 Dec, 2022 05:38 PM

 

Published : 28 Dec 2022 05:38 PM
Last Updated : 28 Dec 2022 05:38 PM

Rewind 2022 | அரசியல் முகம்: மு.க.ஸ்டாலின் - திரும்பிப் பார்க்க வைக்கும் ‘திராவிட மாடல்’

மு.க.ஸ்டாலின்

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் வரிசையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பற்றிய விரைவுப் பார்வை இது.

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனக் கூறி தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் திமுகவின் தமிழக ஆட்சிக்கான நீண்டகால காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முதல்வரானவுடன் ஸ்டாலின் முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவை: அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்க உத்தரவு; ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய அரசாணை; தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்; ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க அரசாணை என மக்களை பெரிதும் ஈர்த்த ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். இவற்றில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் கடைக்கோடி கிராமங்கள் வரை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமத்துவம், சமூக நீதியை எங்கும் எதிலும் முன்னிறுத்திப் பேசும் முதல்வர் ஸ்டாலின் எல்லா மேடைகளிலும் முழங்குவது திராவிட மாடல் ஆட்சி என்பதைத்தான். அனைவருக்குமான அனைவரையும் உள்ளடக்கிய சமூக நீதியை உறுதி செய்வதுதான் திராவிட மாடல் என்று விமர்சனங்களுக்கு விடையளித்தும் வருகிறார்.

அண்மையில் அவர் தொடங்கிவைத்து அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டமாக இருக்கட்டும் டெல்லி சென்றபோது அங்குள்ள மாடல் ஸ்கூல்களை நேரில் பார்வையிட்டு தமிழகத்தில் மாதிரிப் பள்ளிகளை உருவாக்கிவருவதாக இருக்கட்டும், அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கோடு 'இல்லம் தேடி கல்வி' , 'எண்ணும் எழுத்தும்' , 'நான் முதல்வன்', அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் உயர்கல்விக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி எனப் பல்வேறு திட்டங்களாக இருக்கட்டும், சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடத்தியாக இருக்கட்டும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளால் சென்னை மக்களின் அபிமானத்தை வெகுவாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

உதயநிதியை அமைச்சராக்கியதால் விமர்சனங்கள் இருந்தாலும் கூட நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்துடன் 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக. நீட் விலக்கு, புதிய கல்விக் கொள்கை என நிறைய சவால்கள் இருந்தாலும் கூட 2022-ல் தடம் பதித்த அரசியல் ஆளுமைகளில் ஸ்டாலின் தவிர்க்க இயலாதவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x