Published : 28 Dec 2022 03:51 PM
Last Updated : 28 Dec 2022 03:51 PM

சென்னை ஓஎஸ்ஆர் நிலங்களைப் பெற புதிய நடைமுறை: பயன்பாட்டை கண்காணிக்க தணிக்கைக் குழு

கோப்புப் படம் | சென்னை மாநகராட்சி ஓஎஸ்ஆர் நிலம்

சென்னை: ஓஎஸ்ஆர் நிலங்களைப் பெற புதிய நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. மேலும், ஓஎஸ்ஆர் நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா என்று கண்டறிய தணிக்கைக் குழு அமைக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படி குடியிருப்பு, வணிகம், தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைக்கான மனைப்பிரிவுகள் 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் உள்ளபோது, அதில் 10% நிலத்தினை திறந்த வெளி நிலமாக (osr land) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். இது போன்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 95% ஓஎஸ்ஆர் நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும், எனவே, சென்னை முழுவதும் ஓஎஸ்ஆர் நிலங்கள் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்குள் மாமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க தனிக் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டத்தில் கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளிக்க மேயர் பிரியா, அனைத்து ஓஎஸ்ஆர் நிலங்களும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தணிக்கைக் குழு அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில், ஓஎஸ்ஆர் நிலங்களை பெற புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வகுத்துள்ளது. இதன் விவரம்:

  • சென்னை மாநகராட்சி பணித்துறையால் பெறப்படும் அனைத்து தானப் பத்திரங்களும், நிலம் மற்றும் உடைமைத்துறையிடம் 24 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும்.
  • இந்த தகவல்களை நிலம் மற்றும் உடைமைத் துறை மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • இதன்பின்னர் தானப்பத்திரங்களை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  • உதவிப் பொறியாளர்கள் நிலத்தை பார்வையிட்டு 7 நாட்களுக்குள் மாநகராட்சி வசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இது தொடர்பான தகவல்களை சொத்து பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
  • உதவிப் பொறியாளர் ஓஎஸ்ஆர் நிலத்திற்கு பட்ட மாறுதல் செய்ய மனு அளிக்க வேண்டும்.
  • இது தொடர்பான அறிக்கை மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x