Published : 28 Dec 2022 03:23 PM
Last Updated : 28 Dec 2022 03:23 PM
விழுப்புரம்: திமுக அமைச்சர்களின் ஊழல் வழக்குகளை நீர்த்துப்போக வைப்பதில் லஞ்ச ஒழிப்புத் துறை முனைப்பு காட்டுகிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
விழுப்பும் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சி.வி.சண்முகம் எம்.பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை தன்னிச்சையாக செயல்படாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பல்வேறு பொய்யான வழக்குகளை பதிவு செய்து வருகிறது. ஆனால், ஆளும் திமுகவின் 13 அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் 10, 15 ஆண்டுகளாக அவ்வழக்கு விசாரணையில் இருந்து வருகிற நிலையில், அவ்வழக்குகளை விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டாமல் அவ்வழக்குகளை நீதிமன்றத்தின் மூலம் நீர்த்துப்போக செய்கிற பணியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத் துறை இன்றைக்கு திமுகவின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களையும் இரவு, பகல் பாராமல் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு வரவழைத்து மிரட்டுவது, அச்சுறுத்துவது, தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நினைக்க வேண்டாம். விசாரணையை நியாயமாக நடத்துங்கள், சட்டத்துக்கு புறம்பாக இருக்கக்கூடாது. தன்னிச்சையாக, சுயமாக செயல்படுங்கள்.
தமிழகத்தில் தற்போது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு போயுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருட்கள் விற்பனை, இவற்றையெல்லாம் தடுக்க முறையாக போலீஸாரை பணியமர்த்தாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க பணியமர்த்துகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீங்களே திருந்திக்கொள்ளுங்கள், இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், பழனிசாமி முதல்வராக வருவார். எங்கள் ஆட்சியின் கீழ்தான் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படும். இதே அதிகாரிகள்தான் பணியாற்றுவார்கள்.
ஆகவே, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்களை காப்பாற்ற நினைக்காதீர்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம். அதுபோல் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கடுமையாக எச்சரிக்கை செய்கிறோம்.
கருணாநிதிக்கு பிறகு அந்த கட்சியில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் இவர்கள் எல்லாம் இல்லையா? அவர்களுக்கு தகுதி, திறமை இல்லையா? மு.க.ஸ்டாலினுக்கு மட்டும்தான் திறமை இருக்கிறதா, இவருக்கு பிறகு தற்போது அவரது மகன் உதயநிதி அடையாளம் காட்டப்பட்டுள்ளார். இதுதான் வாரிசு அரசியல்.
இந்தியாவிலேயே ஜனநாயக முறையில் செயல்படுகிற ஒரே இயக்கம் அதிமுக., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா யாரையும் வாரிசாக கைகாட்டவில்லை. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பிறகு தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பழனிசாமி. வாரிசு அரசியலை நாங்கள் செய்வதில்லை.
பொன்முடியை பற்றி பேசினால் நிறைய பேசலாம். என்னைப்பற்றி பேசினால்தான் அவருக்கு பதவி இருக்கும் என்று ஏதேதோ பேசி வருகிறார். எனது தந்தை 1996-ல் இறந்தார். அதன் பிறகு நான் இளைஞரணி செயலாளர், பேரவை செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் அதன் பிறகுதான் மாவட்ட செயலாளர் என்று படிப்படியாக வந்திருக்கிறேன். என்னைப்பற்றி பேசுவதற்கு பொன்முடிக்கு எந்த தகுதியும் கிடையாது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT