Last Updated : 15 Jul, 2014 10:31 AM

 

Published : 15 Jul 2014 10:31 AM
Last Updated : 15 Jul 2014 10:31 AM

மாமல்லபுரத்தில் நிறுத்த முடியாததால் சென்னை திரும்பிய கப்பல் ‘வாக்லி’: நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைவதில் சிக்கல்?

மாமல்லபுரத்தில் ஐ.என்.எஸ். வாக்லி கப்பலை நிறுத்தி அருங் காட்சியகம் அமைக்கும் முதல் முயற்சி தோல்வியடைந்ததால் அக்கப்பல் மீண்டும் சென்னை துறைமுகத்துக்கே கொண்டு வரப்பட்டது. புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி 6 மாதத்துக்குள் மாமல்லபுரத்தில் நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைக் கப்படும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறினர்.

ரூ.250 கோடியில் அருங்காட்சியகம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் 30 ஏக்கர் பரப்பில் கடல்சார் புராதன அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 10 ஏக்கர் அளவில் நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று 2012-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. இதற்காக, மத்திய அரசு வசமிருக்கும் ஐ.என்.எஸ். வாக்லி நீர்மூழ்கிக் கப்பலை தருமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இது கடற்படை சேவை முடித்து மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு ஓய்வு நிலையில் வைக்கப்பட்டிருந்த கப்பலாகும். மத்திய அரசும் அதை தமிழக சுற்றுலாத் துறைக்கு தருவதாக அறிவித்தது.

தமிழகத்திடம் ஒப்படைப்பு

அதன்படி, விசாகப்பட்டினத்தில் இருந்த அந்த கப்பல் கடந்த ஆண்டு சென்னை துறைமுகத் துக்கு கொண்டுவரப்பட்டது. அதை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செந்தூர்பாண்டியன் ஆகியோரிடம் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி அனில் கே.சோப்ரா முறைப்படி ஒப்படைத் தார். தொடர்ந்து, சென்னை துறை முகத்தில் கப்பலை பராமரிப்ப தற்கான பணிகள் நடந்தன. அப்போது, பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் விஷவாயு தாக்கி இறந்தனர். ஆனாலும், தொடர்ந்து பணிகள் நடந்தன. சீனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

‘கடைசி’ பயணம்?

பராமரிப்பு பணிகள் முடிந்ததை யடுத்து, கப்பல் கடந்த மார்ச் மாதம் மாமல்லபுரம் நோக்கி பயணமானது. 36 ஆண்டு காலம் இந்தியக் கடற்படையில் இருந்த ஐ.என்.எஸ். வாக்லி நிரந்த ரமாக மாமல்லபுரத்திலேயே நிறுத் தப்படும் என்பதால் அக்கப்பலின் கடைசிப் பயணம் இது என்றும் சொல்லப்பட்டது.

சென்னை திரும்பியது

மாமல்லபுரத்தில் கடற்கோயி லுக்கு அருகே நீர்மூழ்கி அருங் காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கு போதிய அளவில் தண் ணீர் இல்லாததால் ஐ.என்.எஸ். வாக்லியை நிறுத்த முடியவில்லை. அதனால், மீண்டும் சென்னை துறைமுகத்துக்கே திரும்பியது வாக்லி. நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக கேட்டதற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக திட்ட இயக்க அதிகாரிகள் கூறியதாவது:

6 மாதத்தில் அருங்காட்சியகம்

மாமல்லபுரத்தில் ஏற்கெனவே இருந்த ஏர் ஃப்ளோ தொழில்நுட்பம் கப்பலை நிறுத்து வதற்கு ஏற்புடையதாக இல்லை. மேலும் அங்கு வறண்ட வானிலை நிலவியதால், அதிக நீர் தேக்குவதற்காக மேற்கொள் ளப்பட்ட முயற்சிகளும் தோல்வி யடைந்தன. இதையடுத்து ஐ.என்.எஸ். வாக்லி பாது காப்பு கருதி, மீண்டும் சென்னை துறைமுகத்துக்கே கொண்டு வரப்பட்டது. இதற்காக, நீர்மூழ்கி அருங்காட்சியகம் அமைப்ப தில் சிக்கல் எதுவும் ஏற்பட வில்லை.

வேறு சில நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு விரைவில் கப்பல் மாமல்ல புரம் கொண்டு செல்லப்படும். இன்னும் 6 மாத காலத்துக்குள் அங்கு நீர்மூழ்கி அருங்காட்சியகம் உருவாக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x