Published : 28 Dec 2022 02:16 PM
Last Updated : 28 Dec 2022 02:16 PM
சென்னை: “சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று மருத்துவத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா தொற்று சோதனை செய்வது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "நேற்று (டிச.27) சீனாவில் இருந்து 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தென் கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்திருக்கிறார். மதுரையில் சுகாதாரத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தொடர்ச்சியாக சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற ஐந்து நாடுகளிலிருந்து தமிழகத்தின் பன்னாட்டு விமான நிலையங்களுக்கு நேரிடையாக வந்தாலும் அல்லது பான்சிட் என்கின்ற வகையில் வேறு நாடுகளுக்கு சென்று வந்தாலும் சரி அவர்களுக்கு 100% RTPCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இந்த மூன்று பயணிகள் சீனாவிலிருந்து தென் கொரியா இலங்கை வழியாக மதுரைக்கு வந்து இருக்கிறார்கள். நேற்று அவர்களை கண்காணித்து RTPCR பரிசோதனை செய்யப்பட்டதில் 36 வயது மதிக்கத்தக்க பெண்ணிற்கும், அவர்களுடைய ஒரு பெண் குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களை அந்தப் பெண்ணின் சகோதரர் தன்னுடைய சொந்த காரில் அழைத்து விருதுநகரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அவர்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் அவர்கள் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களை வெளி நடமாட்டம் இல்லாமல் அவர்களை கண்காணிக்க அறிவுறுத்தியிருக்கிறோம். பாதிப்புக்குள்ளான இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார ஆய்வாளர் ஒருவர் அதற்காகவே கண்காணிக்கப்பட்டு நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில், அவர்களை வீட்டில் விட்டுச் சென்ற அவரது சகோதரர் சென்னைக்கு காரில் வந்து கொண்டு இருக்கிறார். நாங்கள் சுகாதார அலுவலரிடத்தில் தொடர்புடையவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதால் அவரை சென்னையிலிருந்து திரும்ப விருதுநகருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காரிலேயே சென்று விடுவார். அவருக்கும் அங்கே RTPCR பரிசோதனை செய்யப்படும். ஏனெனில் அவர் தொற்றுக்குள்ளானவர்களை காரில் அழைத்து சென்றிருக்கிறார். அவருக்கு ஏதெனும் பாதிப்புகள் இருக்கின்றதா என்பதை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கிறோம். இவர்களுடன் பயணித்த இன்னொரு பெண் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இல்லை என்று வந்து இருக்கிறது.
இந்த நிலையில், அவர்களுடைய மாதிரிகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் அந்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இன்னும் 4 அல்லது 5 நாட்களில் அதற்கான பரிசோதனை முடிவுகள் கிடைக்கும். அந்த வைரஸ் BA5 அல்லது BA5-விலிந்து உருமாறியிருக்கும் BF7 வைரஸா என்று 4 அல்லது 5 நாட்களில் தெரியவரும். தொற்று பாதிப்பிற்கு உள்ளான அந்த இருவரும் Mild என்கின்ற மிதமான பாதிப்புடன் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறோம். அவர்களுடைய அருகில் உள்ள யாரும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே அங்கு இருக்கின்ற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவரையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT