Published : 28 Dec 2022 12:49 PM
Last Updated : 28 Dec 2022 12:49 PM

ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

கோப்புப் படம்

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 6 பேர் இன்று காலை மயங்கியதைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

31.05.2009 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு அடுத்த நாள் அதாவது 01.06.2009 முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 எனக் குறைத்து நிர்ணயிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

அடிப்படை ஊதிய வேறுபாடு காரணமாக மொத்த ஊதியம் ரூ.15,500 வரை குறைகிறது. ஒரே நிலையில் கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு பாகுபாட்டுடன் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. இந்த பாகுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை.

ஊதிய முரண்பாட்டை களையக் கோரி ஆசிரியர்கள் பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். முந்தைய ஆட்சியில் இருமுறை அவர்கள் உண்ணாநிலை இருந்தபோது அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இப்போதாவது ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x