Published : 28 Dec 2022 05:31 AM
Last Updated : 28 Dec 2022 05:31 AM
சென்னை: புத்தாண்டு உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கரோனா பரவலால் கடந்த 2021, 22-ம்ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் கரோனா தொற்றுதினசரி பாதிப்பு 10-க்கு கீழ் சென்றதால்,2023-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையே, சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரானில் இருந்து உருமாறிய பிஎஃப் 7 கரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. இதனால், 2023 புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியபோது, “புத்தாண்டு, சமய விழாக்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அதேநேரம், அனைவரும் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். விழாக்களில் பங்கேற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், உடல் நலமாக இருக்க வேண்டும்.
அதற்கு, முகக் கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவை கரோனா விதிமுறைகளில் இன்னமும் இருக்கிறது. அதற்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. எனவே, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கரோனா விதிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT