Published : 27 Dec 2022 08:26 PM
Last Updated : 27 Dec 2022 08:26 PM
மதுரை: கடந்த 2021-22 கல்வியாண்டில் முதல்வரின் மெரிட் விருது உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு பூஜ்ஜியம் (0) என்ற அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,142 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மொத்தம் 33 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு ரூ.1423 கோடிகள் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள தமிழக முதல்வரின் மெரிட் விருது, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் திட்டம், பள்ளிகளில் லேப் உபகரணங்கள் கொள்முதல், பள்ளிகளுக்கான சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட 13 முக்கிய திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தவில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல்களை பெற்ற மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் செ.கார்த்திக் கூறுகையில், "ஓவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்படும்போது ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை பொது மக்களுக்கு வெளிப்படத்தன்மையுடன் தெரிந்துகொள்ள முடிவதில்லை.
அரசும் தெரிவிக்க முன்வருவதில்லை. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பயன்படுத்தாமல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9,27,61,68,000 (927 கோடி) நிதி செலவு செய்யாமல் அரசு கஜானாவிற்கு திருப்பி ஒப்படைப்பு செய்துள்ள அதிர்ச்சி தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஐ மூலம் அம்பலப்படுத்தப்பட்டு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதனால், தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய ரூ.4,281 கோடிகள் நிதியில் கல்வி சார்ந்த அனைத்து திட்டங்களுக்கும் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT