Published : 27 Dec 2022 06:12 PM
Last Updated : 27 Dec 2022 06:12 PM

இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களில் சாலை பணிகள்: அமைச்சர் அறிவுறுத்தல்

அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

சென்னை: இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.

நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகின் மூலம் தமிழகம் முழுவதும் நடைபெறும் சாலை பணிகள், பாலப்பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் இன்று (டிச.27) நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "தொழில்நுட்ப புரட்சி காரணமாக மிக வேகமாக அனைத்துப் பொறியியல் துறைகளிலும் நாள்தோறும் புதிய யுத்திகள் தோன்றுகின்றன. நெடுஞ்சாலைத் துறையும் இந்த வேகத்திற்கு ஈடுகொடுத்துச் செல்ல வேண்டும். சாலைப்பணிகளாக இருந்தாலும், பாலம் கட்டும் பணிகளாக இருந்தாலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இயலும் என்று பொறியாளர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

தொழில் நுட்பங்களை பயன்படுத்தும்போது, குறைவான செலவில் தரமான சாலைகளை, பாலங்களை எப்படி அமைக்கலாம் என்பது குறித்தும், அரசு பெரும் நிதிச் செலவில் அருமையான சாலை உள்கட்டமைப்பை மாநிலத்திற்கு ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுகிற போது அந்தக் கட்டுமானங்களில் பெருமளவில் இயற்கை வளங்களை பாதுகாக்கப் படவேண்டும் என்றும் இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்தத் தேவையில்லாத தொழில் நுட்பங்களையும் மறுசுழற்சி போன்ற புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சுற்றுச் சூழலைப் பாதுகாத்திட வேண்டும்.

கட்டுமானப் பணிகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு பராமரிப்பும் முக்கியம். பராமரிப்புப் பணிகளை உடனுக்குடன் செய்யாவிட்டால் ஒன்று என்பது ஒன்பதாக வளர்ந்து விடும். 2022-23ம் ஆண்டில் மொத்த மூலதன ஒதுக்கீடு ரூ.46, 399 கோடி. இதில் நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கிய தொகை ரூ.18,219 கோடி. இந்த ஆண்டு வழங்கப்பட்ட முழு நிதியையும் பயன்படுத்த அனைத்து அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். நடப்பு ஆண்டு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகிற்கு ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.6728 கோடியை முழுவதுமாக பயன்படுத்தி பணிகளை, விரைவாகவும், தரமாகவும் செய்து செய்து முடிக்க வேண்டும்.

1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்திலிருந்த மாவட்ட இதர சாலையின் நீளம் வெறும் 113 கி.மீ. தான். தற்போது, இதர மாவட்ட சாலைகளின் நீளம் 41,052 கி.மீட்டராக உயர்ந்துள்ளது. முதல்வர் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகள் 2000 கி.மீ. தூரம் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேம்பாடு செய்ய ஆணை பிறப்பித்தார். இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மோட்டார் வாகனங்களின் அதிகரிப்பிற்கு ஏற்ப, சாலைகளை அமைத்திட முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வந்தார். முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாவட்ட, வட்ட தலைமையகங்களின் இணைப்பு சாலைகளை இருவழிச் சாலைகளாவும் மற்றும் நான்கு வழிச்சாலைகளாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 648 சிறிய தரைப்ப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக CRIDP திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டதை விரைவாக முடிக்க வேண்டும்.

கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் நடைபெற்ற வரும் 45 நகரங்களுக்கான புறவழிச்சாலை, 8 சாலை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விபத்தில்லா சாலைகளை அமைக்க சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணிகளை திட்டமிட வேண்டும். வேகத்தடைகள் அமைக்கும்போது IRC வழிகாட்டுதல்படி அமைக்க வேண்டும். தகுந்த முன்னெச்சரிக்கை வழிகாட்டு பலகைகள் தரமானதாக அமைக்கப்பட வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x