Published : 27 Dec 2022 06:05 PM
Last Updated : 27 Dec 2022 06:05 PM

9 மாடி வணிக வளாகமாக மாறும் சென்னை அடையாறு பஸ் டிப்போ: ரூ.993 கோடியில் மேம்படுத்த திட்டம்

அடையாறு பஸ் டிப்போவின் மாதிரி வரைபடம்

சென்னை: சென்னையில் உள்ள அடையாறு பஸ் டிப்போவை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.993 கோடி செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் அடையாறு பஸ் டிப்போ மிகவும் பழமையான பஸ் டிப்போ ஆகும். இந்நிலையில், இந்த பஸ் டிப்போவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு பஸ் டிப்போ மொத்தம் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த டிப்போவில் இருந்து தினசரி 159 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்த டிப்போவில் நிர்வாக அலுவலகம், வாகன நிறுத்துமிடம், டயர் பிரிவு, பராமரிப்பு பிரிவு, உணவகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இதற்கு அருகில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. சோழிநங்கல்லூர் முதல் சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் அடையா மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் அடையாறு பஸ் டிப்போவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது. எனவே, அடையாறு டிப்போவை பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்றுவதற்கான முன் சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது.

இதன்படி தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும். 2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிக கடைகள் இருக்கும் தளமாக இருக்கும். மூன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவைகள் இருக்கும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.993 கோடி செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் முடியும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் மூலம் ரூ.120 கோடியும், மற்றவை மூலம் ரூ.6 கோடியும் என மொத்தம் ரூ.126 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x