Published : 27 Dec 2022 04:07 PM
Last Updated : 27 Dec 2022 04:07 PM
பொள்ளாச்சி: ”இது எனக்கான களம் அல்ல” என்று கூறி பொள்ளாச்சி நகராட்சியின் 7-வது வார்டு திமுக உறுப்பினர் க.நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 32 வார்டுகளில் திமுகவும், 3 வார்டுகளில் அதிமுகவும், ஒரு வார்ட்டில் சுயேட்சையும் வெற்றி பெற்றனர். திமுக பெரும்பான்மை பலத்துடன் பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது. இதில் 7-வது வார்டில் திமுகவை சேர்ந்த நர்மதா (25) நகர மன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண நகர மன்ற கூட்டம், கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி கூட்ட அரங்கில் 7-வது வார்டு உறுப்பினர் நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்க இருந்தார். கூட்டத்தில் 43 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது. ஆனால், தீர்மானங்கள் மீது விவாதங்கள் இன்றி, திடீரென அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற கூட்டத்தில் தனது ராஜினாமாவை அறிவிக்க முடியாமல் போனதால், நகராட்சி தலைவர் மற்றும் ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை நர்மதா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் நர்மதா கூறும்போது, ”கடந்த 10 மாதங்களாக பொள்ளாச்சி நகராட்சி நகர் மன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த நான், எனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகல் கடிதத்தை நகராட்சி தலைவரிடம் அளித்துள்ளேன். நான் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் நகர்மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது எனக்கான களம் அல்ல. மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகுகிறேன். மக்களுக்கு என்னால் இயன்ற பணிகளை செய்ய வேறு சிறந்த களம் அமையும். எனக்கு நகர் மன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியினருக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT