Published : 27 Dec 2022 03:53 PM
Last Updated : 27 Dec 2022 03:53 PM
கும்பகோணம்: தனியார் சர்க்கரை ஆலை விவகாரத்தில் அரசு காலம் கடத்தினால், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.துரைராஜ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 28-வது நாளான இன்று விவசாயிகள் அரை நிர்வாணத்துடன், கையில் அக்னி சட்டி ஏந்தியபடி ஈடுபட்டு கண்டன முழக்கமிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளர் எஸ்.துரைராஜ் பங்கேற்றார்.
அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியது: "விவசாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கான பணத்தையும், அவர்களது பெயரில் ஆலை உரிமையாளர் வாங்கிய பல நூறு கோடி கடனாக பெற்றதை, திரும்பி செலுத்தவில்லை. இது தொடர்பாக விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அனைவரிடம் முறையிட்டும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அரசு நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.
இங்கு போராடி வரும் விவசாயிகளை ஏமாற்றியவர்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் மீது எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அனைத்து ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாதது, தமிழக அரசு விவசாயிகள் பக்கம் உள்ளதா அல்லது விவசாயிகளை ஏமாற்றியவர்கள் பக்கம் உள்ளதா என்பதை யோசிக்கவைக்கிறது.
எனவே, தமிழக அரசு, போராடி வரும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையையும், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்சனை குறித்துத் தொடர்ந்து தலையிடாமல் அரசு காலம் கடத்தினால், தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகளை திரட்டி போராட்டமாக மாறக்கூடிய ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT