Published : 27 Dec 2022 02:52 PM
Last Updated : 27 Dec 2022 02:52 PM
சென்னை: "உட்கட்சியில் பிரச்சினையே இல்லை. பிரச்சினையே இல்லாத ஒரு விஷயத்தை இங்கு நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் இங்கு செய்யவில்லை. அவர்கள் குறித்து விவாதித்து எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது: "திமுக அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்த அரசாக மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு மேலே உயர வேண்டும் என்று நினைத்தார்களோ, அதிலிருந்து தற்போது சரிந்துவிட்டனர். எனவே, மக்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ஆட்சியின் அவலங்களை எல்லாம் எடுத்துக் கூறுவதால், மக்கள் உணர்ந்துள்ளனர்.
2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் வந்தால், இன்னும் நல்ல விஷயம். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கும் வகையில், கிளைக் கழகத்தில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் வரையிலான நிர்வாகிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அப்போது உட்கட்சிப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உட்கட்சியில் பிரச்சினையே இல்லை. பிரச்சினையே இல்லாத ஒரு விஷயத்தை இங்கு நாங்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் குறித்து எந்தவொரு விவாதமும் இங்கு செய்யவில்லை.
எங்களுடைய ஒரே நோக்கம் 2024-ல் திமுவை வீழ்த்த வேண்டும். நாற்பதும் நமதே, நாடு நமதே என்பதற்கேற்ப இலக்கை நிர்ணயிப்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடந்ததே தவிர, ஆண்டிகள் சேர்ந்து ஒன்றாக மடம் கட்டுவார்கள் இல்லையா, அதுதான் ஓபிஎஸ். எனவே அவர்கள் குறித்து விவாதித்து எங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிதான். இந்த கூட்டணியில் இடங்கள் பகிர்வு குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT