Published : 27 Dec 2022 02:17 PM
Last Updated : 27 Dec 2022 02:17 PM
கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி 19, 9 வார்டுகளில் உள்ள பாணாதுறை பிரதான சாலை மற்றும் பாணாதுறை திருமஞ்சன வீதியுள்ள சாலைகள் கடந்த 2 ஆண்டுகளாக குண்டு குழியுமாக மிகவும் மோசமாக இருந்து வருகிறது.
இது குறித்து 19-வது வார்டு அதிமுக உறுப்பினர் ஆதிலெட்சுமிராமமூர்த்தி, மாமன்றம் கூட்டத்திலும், ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் சாலை பணிகள் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், சாலையிலுள்ள பள்ளத்தில் மாணவர்கள், முதியவர்கள் என பலர் விழுந்து விபத்துக்குள்ளானார்கள்.
இது குறித்து அந்த வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள், உறுப்பினரிடம் கேள்விக் கேட்டனர். இதனையடுத்து இன்று மாநகராட்சி நிர்வாகம், சாலை பணிகளை மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் கட்டுமானப் பொருட்களை திரட்டி, சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்து, அதற்கான பதாகைகளை அந்த வார்டுகளில் அமைத்தனர். இது குறித்துத் தகவலறிந்த கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன், அங்கு வந்து உறுப்பினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, 2 நாட்களுக்கு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில், கலைந்து சென்றனர்.
இது குறித்து 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதிலெட்சமி ராமமூர்த்தி கூறியது: ”பாணாதுறை பிரதான சாலை மற்றும் திருமஞ்சன வீதிச்சாலை வழியாக நீதிமன்றம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலகத்திற்குச் செல்லும் பிரதான சாலையாகும். ஆனால் மிகவும் மோசமாக, குண்டு குழியுமாக இருப்பது குறித்து பல முறை புகாரளித்தும், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், செயல்படாத நிர்வாகத்தைக் கண்டித்து, பொதுமக்களை கட்டுமானப் பொருட்களை திரட்டி சாலையில் பேட்ச் பணி மேற்கொள்ளவதாக பதாகைகளை அமைத்தோம். ஆனால், 2 நாட்களுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும், தவறும் பட்சத்தில் பொது மக்கள் அமைக்கும் சாலைப் பணிக்கு போலீஸாரே பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும், இச்சாலையில் கடந்த 2020-ம் ஆண்டு 750 மீட்டர் தூரத்திற்கு ரூ.45 லட்சம் மதிப்பில் சாலை போடப்பட்டதற்கான பணி ஆணை உள்ளது. ஆனால், சாலை போடப்படவில்லை. இதுகுறித்து மாமன்றக் கூட்டத்தில் கேள்வி கேட்டால், அப்போதுள்ள பொருட்களை மட்டும் பேச வேண்டும் எனப் பேசவிடுவதில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம், ஒப்பந்தக்காரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாரளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...