Published : 27 Dec 2022 01:01 PM
Last Updated : 27 Dec 2022 01:01 PM

அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை - மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி |

சென்னை: அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை என்றும் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்றும் இதுவரை பாஜக வற்புறுத்தியதில்லை என்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர். மாளிகையில் நடைபெற்றது. இதில் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன், ”பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். அதுபோல் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி. வாக்குச்சாவடி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். சட்டப்போராட்டங்கள் குறித்து கவனம் செலுத்தாமல் கட்சிப் பணியில் கவனம் செலுத்த வேண்டும். தொண்டர்களும், நிர்வாகிகளும், உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்தி விடாலம். அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தவில்லை. இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று இதுவரை பாஜக வற்புறுத்தியதில்லை" என்றார்.

இக்கூட்டத்தில் வரும் ஜனவரி 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு, ஜனவரி 9 ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காதது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x