Published : 27 Dec 2022 10:34 AM
Last Updated : 27 Dec 2022 10:34 AM
சென்னை: மக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருக்கிறார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் முதல்வர் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது. இதை சட்டப்பூர்வமாக்க தமிழகத்தில் பொதுச்சேவை பெறும் உரிமையை செயல்படுத்த வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடாகும்.
வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து முதல்வரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கலந்தாய்வு நடத்தினார். அப்போது வருவாய் துறையால் வழங்கப்பட வேண்டிய சாதிச் சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் போன்றவை நிலுவையில் இருப்பதை அறிந்த முதல்வர், அவற்றை அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார். முதல்வரின் இந்த ஆணையால் நீண்ட காலமாக சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு, அவை உடனடியாக கிடைக்கும்.
பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற முதல்வரின் நோக்கம் வரவேற்கத்தக்கது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால், அவரது நேரத்தை வீணடிக்காமல், தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக அவர் செய்ய வேண்டியது பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான்.
பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், அரசின் சேவைகளைப் பெற கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக 93 விழுக்காட்டினரும், அரசின் சேவைகளை பெறுவதில் ஏற்பட்ட அனுபவம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லை என்று 82 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு உயர்கல்வி மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் விண்ணப்பித்த சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதமும், இடையூறுகளும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ் பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை; தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசு அலுவலகங்களில் ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இவ்வாறாக பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் சேவை கிடைப்பதையும், அரசு நிர்வாகம் தூய்மை அடைவதையும் உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற அருமருந்து இருக்கும் நிலையில், அதை செயல்படுத்துவதற்கு அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்பதே பாமகவின் கருத்து.
அரசு சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதில் பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதால் தான் கடந்த காலங்களில் இந்த சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எண்ணற்ற போராட்டங்களையும், இயக்கங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியுள்ளது. இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கங்களையும் பாமக நடத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக முதல்வருக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எதிர்க்கட்சியாக இருந்த போது இந்த கோரிக்கையை அவரும் பல முறை வலியுறுத்தியிருக்கிறார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறித்த வாக்குறுதி இடம் பெற்றிருந்தது. 2021-ம் ஆண்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித் சேவை பெறும் உரிமை சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று அறிவித்தார்.
எனவே, தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT