Published : 27 Dec 2022 07:18 AM
Last Updated : 27 Dec 2022 07:18 AM
சென்னை: கரோனா தொற்றை தடுக்கத் தேவையான மருந்துகள், ஆக்சிஜனுடன் அரசு மருத்துவமனைகள் தயாராக இருக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சீனா, ஜப்பான், தென்கொரியா அமெரிக்கா உள்ளிட்ட 10-க்கும்மேற்பட்ட நாடுகளில் ஒமிக்ரான் பி.எஃப்.7 கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையொட்டி, பொதுமக்கள் முகக் கவசம் அணியுமாறும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்துமாறு, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், சீனா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் (பொ) சாந்தி மலர், அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான கரோனா பரிசோதனை உபகரணங்கள் கையிருப்பில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், முகக் கவசங்களை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் உபகரணங்கள் கையிருப்பு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஆக்சிஜன் குழாய்கள், வென்டிலேட்டர் சாதனங்கள், உயிர் காக்கும் முக்கிய உபகரணங்கள் பழுதின்றி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவது அவசியம். அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவமனையின் படுக்கை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, அனைத்து தனியார் மருத்துவமனைகள், தனியார் பரிசோதனை மையங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அதில், ‘‘தமிழகத்தில் தற்போதுகரோனா பாதிப்பு மிகக் குறைவாகஇருந்தாலும், வெளிநாடுகளில் கரோனா பரவலை கருத்தில்கொண்டு, மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, கரோனா சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே,அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தங்களது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் சளி மாதிரிகளை அரசின் மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பவேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக பொது சுகாதாரத் துறைதுணை இயக்குநர் ராஜு செயல்படுவார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT