Published : 27 Dec 2022 07:17 AM
Last Updated : 27 Dec 2022 07:17 AM
நாகப்பட்டினம்/நாகர்கோவில்: 18-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவிடங்களில் நேற்று பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
2004 டிச.26-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையில் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதன் 18-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, நாகை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் ஆட்சியர் அருண் தம்புராஜ், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ் உள்ளிட்டோர் நேற்று மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
கீச்சாங்குப்பம் சுனாமி நினைவு ஸ்தூபி, நாகை துறைமுகம் எதிரில் உள்ள சுனாமி நினைவு தின பேனர், அக்கரைப்பேட்டை கடற்கரை வளாகத்தில் உள்ள சுனாமி நினைவிடம் ஆகிய இடங்களில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
நம்பியார் நகர் கடற்கரையில் மீனவ கிராம மக்கள் படையலிட்டு, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர், கடற்கரை முன் அமர்ந்து பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர். மாவட்டத்தில் உள்ள 51 மீனவ கிராமங்களிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா மையம் அருகில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் ஆட்சியர் ரா.லலிதா, எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர்.
தரங்கம்பாடியில் உள்ள சுனாமி நினைவுத் தூண், சுனாமியால் உயிரிழந்தோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் ஆகியவற்றில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர், மீனவக் கிராம பஞ்சாயத்தார், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
காரைக்கால்: காரைக்கால் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவிடத்தில் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, ஆட்சியர் எல்.முகமது மன்சூர், முதுநிலை எஸ்.பி ஆர்.லோகேஸ்வரன், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மண்டல எஸ்.பி ஏ.சுப்பிரமணியன், எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம் மற்றும் அரசியல் கட்சியினர், மீனவப் பஞ்சாயத்தார், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் மட்டும் சுமார் 414 பேர் சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட குளச்சல் காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் நேற்று உயிரிழந்தவர்கள் உறவினர்கள் மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும், மெழுகுவத்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் சாந்தியடைய திருப்பலி நடைபெற்றது.
இதுபோல் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் மரணமடைந்த 199 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவி, மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) குணால் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். மணக்குடி மீனவ கிராம தேவாலயத்தில் திருப்பலி நடந்தது. கல்லறை தோட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT