Published : 27 Dec 2022 06:01 AM
Last Updated : 27 Dec 2022 06:01 AM

பன்முக போக்குவரத்து மையமாகும் பரங்கிமலை ரயில் நிலையம்

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் மின்சார ரயில் தடத்தில் அமைந்துள்ள பரங்கிமலை ரயில் நிலையம் தென் சென்னையில் பன்முக போக்குவரத்து மையமாக (மல்டி மாடல் மையமாக) மாற உள்ளது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில் வழிதடத்தில் பரங்கிமலை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது, சென்னை கடற்கரையில் இருந்து 11-வதுநிலையமாக இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்துடன் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தை இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெறுகிறது. பறக்கும் ரயில் வழித்தடத்தில் ஆதம்பாக்கம்-பரங்கிமலை வரை கடைசி கட்டப்பணிகள் வரும் ஏப்ரலில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 தளங்களுடன் ரயில் நிலையம்: இதுதவிர, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமான மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை பரங்கிமலை நிலையம் வழியாக செல்கிறது. இதன்மூலம், பலவகை போக்குவரத்து மையமாக பரங்கிமலை ரயில் நிலையம் மாற உள்ளது.

இந்நிலையத்தின் தரை தளத்தில் கடற்கரை-செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் பாதை உள்ளது. பரங்கிமலை-கடற்கரை பறக்கும் ரயில் பாதை முதல் தளத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் பாதை 2-வது தளத்திலும் அமைய உள்ளன. பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் பாதையில் ரயில் சேவைதொடங்கி பிறகு, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வேளச்சேரி, அடையாறு, மயிலாப்பூர், தரமணிக்கு செல்ல பரங்கிமலை நிலையத்துக்கு பயணிகள் வருவார்கள். அங்கிருந்து,மின்சார ரயிலில் ஏறி பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 10 ஆயிரம் பேர் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் தெற்கு நுழைவு வாயிலிலிருந்து ஆதம்வாக்கம் பாதையில் ஒருங்கிணைந்த கட்டிடம் வரை 12 மீட்டர் அகலத்தில் நடைமேம்பாலம் அமைக்கப்படும். இது அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும். இதுதவிர, மொத்தம் 5 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

இரட்டை வெளியேற்ற நடைமேடைகள் பிளாட்பாரம் 1-ல் கட்டப்பட்டுள்ளன. கடற்கரை-பரங்கிமலை பறக்கும்ரயில் தடத்தில் தினசரி 4 முதல் 5 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வார்கள் என்று கடந்த 2010-ம் ஆண்டுமுன்மொழியப்பட்டது. ஆனாலும், கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் தினசரி ஒரு லட்சம் பேர் பயணிக்கிறார்கள். வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடங்கிய பிறகே, பயணிகள் எண்ணிக்கை தொடர்பாக முழுவிவரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x