Published : 27 Dec 2022 04:17 AM
Last Updated : 27 Dec 2022 04:17 AM
சின்னமனூர்: தேனியில் புதிதாக அமைக்கப்பட்ட இருவழிச் சாலையில் போதுமான பராமரிப்பு இல்லை. இதனால் பல இடங்களில் மண்மேவி போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் - குமுளி இருவழிச் சாலை திட்டப் பணிகள் கடந்த 2010-ல் ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் தொடங்கியது. இதில் தேனி மாவட்டம் வீரபாண்டியில் இருந்து லோயர்கேம்ப் வரை பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த அக்.1-ம் தேதி முதல் வாகனப் பயன்பாட்டுக்காக சாலை திறக்கப்பட்டது. இச்சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து உப்பார்பட்டி விலக்கு அருகே சுங்கச் சாவடி அமைத்து சுங்க வரி வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இந்த வழித்தடத்தில் உள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான பாதை மண் மேவி கிடக்கிறது. மேலும் சாலையோரத்தில் களைச்செடிகள் அதிக அளவில் வளர்ந்து இப்பாதையை மறைத்துள்ளன.
இரு சக்கர வாகனங்கள் அதற்கான பாதையில் பயணிக்க முடியாமல் இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் விதிகளை மீறி தடம் மாற வேண்டியுள்ளது. எதிரே அதிவேகத்தில் வாகனங்கள் வரும்போது வேறுவழியின்றி சாலையோரத்தில் வாகனத்தை திருப்பும்போது மண்மேவிக் கிடப்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
கோட்டூர், சீலையம்பட்டி, கீழபூலாநந்தபுரம், எஸ்பிஎஸ்.காலனி, சின்னமனூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இச்சாலை மோசமான நிலையில் உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இச்சாலையை முறையாக பராமரித்து பாதுகாப்பான பயணத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வாகன ஓட்டுநர் ரமேஷ் கூறுகையில், தேனி மாவட்டத்துக்கு அடிக்கடி சுற்றுலா கார் ஓட்டி வருவேன். தற்போது புதியதாக இங்கு சாலையில் சுங்கக் கட்டணம் பெறப்படுகிறது. ஆனால் வாகனங்களுக்கான வசதியோ, சாலை பராமரிப்போ முறையாக செய்யப்படவில்லை. இரு சக்கர வாகனஙகள் அனைத்தும் கனரக வாகனங்கள் செல்லும் பாதையில் செல்வதால், கார் உள்ளட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்கள் செல்லும் பாதையை சத்தப்படுத்தி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களிடம் கேட்டபோது, தொடர்மழை காரணமாக சாலையோரத்தில் களைச்செடிகள் அதிகம் வளர்ந்துவிட்டன. மேலும் சாலையில் பெருக்கெடுத்து வந்த மழைநீர் மண்ணை இப்பகுதியில் மேவிவிட்டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். பராமரிப்புக்கான கருவிகள், இயந்திரங்கள் வந்ததும் சீரமைக்கப்படும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT