Published : 26 Dec 2022 04:54 PM
Last Updated : 26 Dec 2022 04:54 PM
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு மற்றும் வெல்லம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்டு, அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தத் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமின்றி இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. எனவே, 2023-ம்ஆண்டு மளிகைப் பொருட்களுக்குப் பதில், மீண்டும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக ரூ.2,357 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க கோரி, கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக ஒரு கரும்பு மற்றும் ஒரு கிலோ பனை வெல்லம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு மற்றும் வெல்லம் வழங்க கோரி பல்வேறு மாவட்டங்களில் தமிழக பாஜகவினர் கையில் கரும்பை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட பாஜகவினர், கையில் கரும்பு, வெல்லம் உள்ளிட்டவை ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு மற்றும் வெல்லம் வழங்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT