Last Updated : 26 Dec, 2022 03:57 PM

 

Published : 26 Dec 2022 03:57 PM
Last Updated : 26 Dec 2022 03:57 PM

மாநில அந்தஸ்தை வலியுறுத்தி டிச.28-ல் திட்டமிட்டபடி புதுச்சேரியில் பந்த்: அதிமுக அறிவிப்பு

இடம்: புதுச்சேரி

புதுச்சேரி: மாநில அந்தஸ்தை வலியுறுத்தி திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (டிச.28) புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடக்கும், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கும், ஆட்சியிலுள்ள பாஜகவுக்கும் மாநில அந்தஸ்து தருவதில் விருப்பமில்லை என்று அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் கூறியுள்ளார்.

மாநில அஸ்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் மன உளைச்சல் ஏற்படுகிறது என முதல்வர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மாநில அந்தஸ்து விவகாரம் புதுவையில் சூடுபிடித்தது. நேரு எம்எல்ஏ தலைமையில் சமூக இயக்கங்கள் மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில், நாளை மறுநாள் புதன்கிழமை மாநில அந்தஸ்தை வலியுறுத்தி முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தப்படும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிவித்தார்.

இந்த பந்த் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. புத்தாண்டுக் கொண்டாட்ட காலம் என்பதால் வியாபாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர். வர்த்தக சபை, வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு, தொழில் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் வியாபார, வர்த்தக சங்கத்தினர் பந்த் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பந்த் போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பந்த் போராட்டம் நடைபெறும் என இன்று தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: “நாடு சுதந்திரமடைந்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல், நிர்வாக ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய சூழல் புதுச்சேரியில் உள்ளது. எனவே யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து தகுதி தர மத்திய அரசை வலியுறுத்தி நாளை மறுநாள் பந்த் போராட்டத்தை அதிமுக நடத்துகிறது.

புதுச்சேரி மக்களின் நீண்டகால கோரிக்கைக்காக நடைபெறும் ஒரு நாள் போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநில அந்தஸ்திற்காக இதை பொறுத்துக்கொள்ள வேண்டும். வழக்கம்போல திமுக எதிர்த்துள்ளது. கடந்த காலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்தில் எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் அறிவித்த புதுவைக்கு சம்பந்தமில்லாத பல போராட்டங்களை நடத்தினர். அப்போதெல்லாம் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா? மக்களை குழப்பி திசை திருப்பும் வேலையில் திமுகவின் ஈடுபடுகின்றனர்.

மாநில அந்தஸ்தில் திமுகவின் கொள்கை, நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அதிமுகவில் கோஷ்டி பூசலை மறைக்கவும், தன்னை நிலை நிறுத்தி கொள்ளவும் பந்த் போராட்டத்தை நான் அறிவித்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார். எதிர்கட்சித்தலைவரால் அவர் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை நடத்த முடியுமா? எங்கள் கட்சி பிரச்சினைகளை நாங்கள் பேசி தீர்ப்போம். மக்களுக்கான, மாநில உரிமைக்காக நடைபெறும் போராட்டம். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

பந்த் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி சில இயக்கத்தினர் தெரிவித்தனர். மறுபரிசீலனைக்கு இடமின்றி நாளை மறுநாள் பந்த் போராட்டம் நடைபெறும். பாஜக ஆதரவு எம்எல்ஏ ஒருவர் பந்த் போராட்டத்தை நடத்த விடமாட்டோம் என கூறியுள்ளார். அவர் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். அவர் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் என்பதையே மறந்துள்ளார். போராட்டத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். மாநில அந்தஸ்து குறித்து ஆளுநர் தமிழிசை பேசுவது முறையல்ல.

ராஜ் நிவாசின் அடிமைத் தனத்திலிருந்து விடுபடவே இந்த போராட்டம். ஆளுநருக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மாநிலம் ஸ்தம்பிக்கும். இதற்கு உதாரணம் கிரண்பேடி, நாராயணசாமி இடையில் ஏற்பட்ட மோதல்தான் சாட்சி.தற்போது ஆளுநர்-முதல்வர் உறவு தற்காலிகமானதாக இருக்கலாம்.அண்ணன், தங்கை இடையே பொங்கல், தீபாவளி சீர்வரிசை குறைந்தால் கூட பிரச்சினை ஏற்படத்தான் செய்யும். மத்திய பாஜக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை, வலியுறுத்தவே போராட்டம் நடத்துகிறோம்.

மாநில அந்தஸ்தை வேண்டாம் என கூறிய நாராயணசாமிக்கோ, காங்கிரசுக்கோ போராட்டத்தை பற்றி பேச தகுதியில்லை. மத்தியில் நீண்டகாலமாக ஆட்சியிலிருந்த திமுகவும் எந்த முயற்சியும் எடுக்காமல் பேச அருகதையில்லை. உண்மையில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கும், ஆட்சியிலுள்ள பாஜகவுக்கும் மாநில அந்தஸ்து தருவதில் விருப்பமில்லை என்ற சூழல்தான் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x