Published : 26 Dec 2022 02:14 PM
Last Updated : 26 Dec 2022 02:14 PM
புதுச்சேரி: “வாரிசு என்பது படம் என்றாலும், பதவியாக இருந்தாலும் பிரச்சினைதான்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து கூறியுள்ளார். “பாஜக ஆளும் மாநிலங்களை விட, அவர்களின் எண்ணங்களை தமிழக திமுக அரசு செய்கிறது” என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியது: "மாநில அந்தஸ்து தொடர்பாக முதலில் பேசியது நாங்கள்தான். அதன்பிறகுதான் ரங்கசாமியே பேசினார். மாஹே, ஏனாம் வேண்டாம். புதுச்சேரிக்கு மாநில உரிமை தரக் கோரி தொடர்ச்சியாக போராடுவோம்.
காங்கிரஸ் குடும்பம் என்பதால் கமலஹாசனுக்கு அதில் ஈர்ப்பு இருப்பது சகஜம்தான். டெல்லியில் போய் ராகுலுடன் கூட்டத்தில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம்.
நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். கூட்டணி சேர்வது கொள்கைக்கு இடம் தராது. எங்களுடன் சேர்ந்து கூட்டணி அமைக்க யாரும் வரமாட்டார்கள். தனிமனிதன் மூலமே புரட்சி பரவியது. அதுபோல் என்னாலும் முடியும். ரங்கசாமி கூட்டணி வைத்துள்ள பாஜகவிடம் மாநில அந்தஸ்துக்காக போராடவேண்டியதில்லை; கேட்டுப் பெற்று சாதிக்க வேண்டும். காமராஜர் சீடன் எனக் கூறி பாஜகவிடம் கூட்டணி வைத்தபிறகு என்ன ஆலோசனை சொல்ல முடியும்.
மாநில அந்தஸ்துக்கு போராடும் ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து சொன்னோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரங்கசாமி உளமாற மாநில அந்தஸ்துக்கு போராடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவியை அனுபவித்துவிட்டார். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் போய்விட்டது.
ஆளுநரே தலையீடுதான். ஆளுநர் பதவியே திரும்ப பெற வேண்டும். மக்களால் தேர்வான அரசே சட்டத்தை நிறைவேற்ற முடியாது பாஜக இல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க ரவி, தமிழிசை போன்றோர் நியமிக்கப்பட்டு மேலிடத்துக்கு தகவல் செல்வது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
காங்கிரஸ் கட்சியில் புதுச்சேரியில் இருந்தோர் சரணடைந்ததால் எளிதாக கைப்பற்ற பாஜக நினைக்கிறது. புதுச்சேரியை பிடித்துவிட்டால் எளிதாக தமிழகத்தில் கால்பதிக்க பாஜக நினைக்கிறது. இப்போது பாஜக எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்தாலும் தேர்தலின்போதுதான் உறுதியாக கூற இயலும்.
பாஜகவிடம் திமுக சரணடைந்து வேலை செய்கிறது. பாஜக ஆளவேண்டியதற்கு அவசியமில்லாமலே அனைத்தும் திமுக செய்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களை விட அவர்களின் எண்ணங்களை தமிழக திமுக அரசு செய்கிறது. பாஜககாரர்களை விட திமுக விசுவாசமாகவுள்ளது. ராகுலுடன் கூட்டணி வைத்து அனைத்து திட்டங்களுக்கும் மோடியைதான் அழைத்து வருகிறார்கள். யாருடன் திமுக இருக்கபோகிறது என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது.
வாரிசு என்றாலே படம் என்றாலும், பதவியாக இருந்தாலும் பிரச்சினைதான்.
அதானி, அம்பானிக்கு செய்யதைத் தவிர்த்து இந்திய மக்களுக்கு செய்த ஒரு நல்லதையாவது பாஜக சொல்லுமா?" என சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT