Published : 26 Dec 2022 12:16 PM
Last Updated : 26 Dec 2022 12:16 PM

புத்தாண்டு பரிசாக  மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும்: ராமதாஸ் 

பாமக நிறுவனர் ராமதாஸ் |

சென்னை: புத்தாண்டு பரிசாக மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," உங்கள் மகளையோ, சகோதரியையோ குடிப்பழக்கம் உள்ள உயரதிகாரிக்கு மணம் முடிப்பதை விட, குடிப்பழக்கம் இல்லாத தொழிலாளிக்கோ, ரிக்‌ஷா ஓட்டுபவருக்கோ திருமணம் செய்து கொடுங்கள் என்று மத்திய இணையமைச்சர் கௌஷல் கிஷோர் கூறியிருக்கிறார். அவரது வார்த்தைகள் உண்மையானவை.

மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை. அவர் எம்.பியாக இருந்த போது அவரது மனைவி எம்.எல்.ஏ. ஆனாலும் மதுவுக்கு அடிமையான மகனை மீட்க முடியவில்லை. இளம் வயதில் அவர் இறந்தார். இளம் வயதில் மருமகள் கைம்பெண் ஆனார். அப்போது அவர்கள் குழந்தையின் வயது 2.

இதே கொடுமை தான் தமிழகத்தில் தெருவுக்கு தெரு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இளம் கைம்பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். சாலை விபத்துகள், தற்கொலைகள், மன நல பாதிப்புகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கும் மதுவே காரணம்.

மத்திய அமைச்சர் கௌஷல் கிஷோரின் வலி நிறைந்த வார்த்தைகளை ஆட்சியாளர்களும், பொதுமக்களும் திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் புத்தாண்டில் அல்ல.... நாளை அல்ல.... இன்றே, இந்த நிமிடமே மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.

மதுவால் நாடு சீரழிவதைத் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு தான் கூடுதலாக உள்ளது. இளம்பெண்கள் கைம்பெண்களாவதையும், குழந்தைகள் ஆதரவற்றவர்கள் ஆவதையும் தடுக்க தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்" இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x