Published : 26 Dec 2022 04:22 AM
Last Updated : 26 Dec 2022 04:22 AM
சென்னை: பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரைஅடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நாளை முதல் (டிச.27)வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகிக்குமாறு நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு (2022) பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்டு, அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் மளிகைப் பொருட்கள் என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்த தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் தரமின்றி இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின. எனவே, 2023-ம்ஆண்டு மளிகைப் பொருட்களுக்குப் பதில், மீண்டும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக ரூ.2,357 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 2-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். அன்றே, மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கிவைக்கின்றனர்.
இந்த திட்டத்துக்கான பச்சரிசி கிலோ ரூ.32.50 என்ற விலையில், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் வாயிலாகவும், சர்க்கரை கிலோ ரூ.39.27 என்ற விலையில், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம் மூலமும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த ஆண்டைப்போல பொங்கல் தொகுப்புடன், கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்கான முதல்கட்டப் பணிகளை, உணவுப் பொருள் வழங்கல் துறை மேற்கொண்டுள்ளது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் செயல்படும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் வீடு வீடாகச் சென்று, நாளை (டிச. 27) மற்றும் டிச. 28-ம் தேதி டோக்கன் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தெரு வாரியாகவோ, வரிசை எண் அடிப்படையிலோ டோக்கன் வழங்க வேண்டும். மேலும், எந்த நாளில், எந்த நேரத்தில் கடைக்கு வரவேண்டும்என்பதையும் டோக்கனில் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், விநியோக நாள் தொடர்பாக இதுவரை அறிவிப்பு வரவில்லை என்று நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘டோக்கன் விநியோகம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர்வரும் ஜனவரி 2-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
ஆனால், கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை எப்போது வரை வழங்கலாம், வரும் வெள்ளிக்கிழமை கடை உண்டா என்பது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT